×

திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் பதம் பார்க்கும் கான்கிரீட் கம்பிகளால் பயணிகள் கடும் பாதிப்பு: புதிதாக சிமென்ட் சாலை அமைக்கப்படுமா?

திருச்செந்தூர்: திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் பதம் பார்க்கும் கான்கிரீட் கம்பிகளால் அவதிப்படும்  பயணிகள் புதிதாக சிமென்ட் சாலை அமைக்கப்படுமா? என எதிர்பார்க்கின்றனர். கோயில் நகரமான திருச்செந்தூருக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் நாகர்கோவில், செங்கோட்டை, தென்காசி, தூத்துக்குடி, சங்கரன்கோவில், ராஜபாளையம், கடையம், புளியங்குடி, வள்ளியூர், ஆலங்குளம், நெல்லை உள்ளிட்ட இடங்களில் இருந்து பஸ்கள் மூலம் திருச்செந்தூருக்கு வருகின்றனர். இவர்கள் திருச்செந்தூர் பகவத்சிங் பஸ் நிலையம் வந்தடைந்ததும் அங்கிருந்து கோயிலுக்கு பாதயாத்திரையாகவும்,  ஆட்டோக்களிலும் சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

ஆன்மிகத்தோடு சிறந்த சுற்றுலா தலமாகவும் திகழும் திருச்செந்தூருக்கு  தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இயக்கப்படுகின்றன. ஆனால், இங்குள்ள பகத்சிங் பஸ் நிலையத்தில் முறையாக பராமரிப்பு செய்யப்படாததால் ஏற்கனவே அமைக்கப்பட்ட சிமென்ட் ரோடு உருக்குலைந்துள்ளது. ஆங்காங்கே பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் வண்ணம் நீட்டிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக பஸ்நிலையத்தில் பஸ்கள் வரும் நுழைவு வாயில் பகுதியில் கான்கிரீட் பெயர்ந்து சுமார் ஒரு அடி நீளத்திற்கு வெளியே தெரிகின்றன. அவற்றின் மீது பஸ்கள் ஏறி, இறங்கும் போது கம்பிகள், டயர்களை பதம் பார்த்து விடுகின்றன. இதனால் அவை, பஞ்சராகி ‘ஸ்டெப்பினி’ பொருத்தும் வரை பஸ்களிலேயே பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

மேலும் பஸ்நிலையத்திற்குள் டீக்கடை உள்ளிட்ட ஏராளமான கடைகள் உள்ளதால் கடைகளுக்கு டூவிலரில் வருபவர்களையும் கான்கிரீட் கம்பிகள் விட்டு வைப்பதில்லை. இரவு நேரங்களில் பஸ்நிலையத்திற்கு வரும் வெளியூர் பயணிகள் கம்பிகள் இருப்பது தெரியாமல் அவற்றில் கால் இடறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே, பஸ்நிலையத்தில் சிமென்ட் ரோடு அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து பஸ்நிலைய வியாபாரிகள் கூறும்போது, திருச்செந்தூர் பகவத்சிங் பஸ் நிலையத்தில் கடந்த திமுக ஆட்சியின் போது சிமென்ட் ரோடு அமைக்கப்பட்டது. அதன்பிறகு 10 ஆண்டுகளாக பராமரிப்பு எதுவும் இல்லை. ரோடும் போடவில்லை.

இதனால் சிமென்ட் ஜல்லிகற்கள் பெயர்ந்து ஆங்காங்கே கம்பிகள் வெளியே தெரிகின்றன. நாங்கள் டூவிலரில் வரும் போது கம்பிகுத்தி பஞ்சராகி விடுகிறது. மழை காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி கம்பிகள் நீரில் மூழ்கி விடுவதால் வெளியூர் பயணிகள் கால்களில் கம்பி குத்தி காயமடைகின்றனர். இவ்வாறு திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையத்தில் பதம் பார்க்கும் கான்கிரீட் கம்பிகளால்  அவதிப்படும்  பயணிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் இங்கு புதிதாக சிமென்ட் சாலை அமைக்கப்படுமா? என்ற  எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Tags : Threchentur , Passengers severely affected by concrete bars at Thiruchendur bus stand: Will a new cement road be constructed?
× RELATED தெற்கு ரயில்வே அறிவிப்பு:...