×

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்களில் 27,000 டன் நெல் மூட்டை தேக்கம்: அதிகாரிகள் அலட்சியம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள 27 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனையுடன் உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா தாளடி பருவத்திற்காக  103 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து 1லட்சத்து 85 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதில் 1லட்சத்து 58 ஆயிரம் டன் நெல் கிடங்கு மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 27,000 டன் ஆங்காங்கே உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேக்கம் அடைந்துள்ளது.

நெல் மூட்டைகள் மாதக்கணக்கில் வெயிலிலும், மழையிலும் கிடப்பதால் அடியில் இருக்கும் மூட்டைகள் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த நெல்லை அரிசியாக்கி பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கும்போது அரிசியின் தரம் குறையும். உடனே கிடங்குக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர். குடோன்களில் இடப்பற்றாக்குறை நிலவுவதால், தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகளை எடுத்துச்செல்வதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஒரு மாதமாக நெல் மூட்டைகள் வெயிலில் காய்ந்து வருவதால் 17 சதவீத ஈரப்பதத்துடன் மூட்டைகள் பிடிக்கப்பட்டது. தற்பொழுது 13 சதவீதமாக ஈரப்பதம் குறைந்துவிட்டது. இதனால் மூட்டை ஒன்றுக்கு 3 முதல் 4 கிலோ வரை எடை குறையும். அதற்கான அபராத தொகையை கொள்முதல் ஊழியர்களிடம் ஒரு சில மாதங்களில் வசூல் செய்து விடுவார்கள். லாரிகளில் நெல்மூட்டைகளை எடுத்துச்செல்ல கொள்முதல் நிலையத்திற்கு வந்தால் மூட்டை ஒன்றுக்கு ரூ.5 கட்டாயமாக கொடுக்க வேண்டும். இல்லை என்றால் நெல்மூட்டைகளை ஏற்றிச்செல்ல மாட்டார்கள் என்றனர்.

Tags : Mayiladuthurai district , 27,000 tonnes of paddy in Mayiladuthurai district: Officials negligent
× RELATED சீர்காழி அருகே குடிநீர் வழங்காததைக்...