பென்னாகரம் அருகே பிடிபட்ட காட்டுயானையை முதுமலையில் விடுவித்தது ஏன்?.. வனத்துறையினர் விளக்கம்

ஊட்டி: பென்னாகரம் அருேக பிடிபட்ட காட்டு யானையை முதுமலை வனப்பகுதியில் விடுவித்தது ஏன்? என்பது தொடர்பாக வனத்துறையினர் விளக்கம் அளித்தனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் அருகே உள்ள பதனவாடி காப்புக்காடு பகுதியில் சுமார் 14 வயதான ஆண் காட்டு யானை கடந்த இரு வாரங்களாக அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து ேசதம் விளைவித்து வந்தது. இந்த யானையைக் காட்டுக்குள் விரட்ட வேண்டும் எனக் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் மயக்க ஊசி செலுத்தி அந்த யானை பிடிக்கப்பட்டது.

தொடர்ந்து லாரியில் ஏற்றப்பட்டு நேற்று அதிகாலை நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியான அசுவரமட்டம் பகுதியில் யானை விடுவிக்கப்பட்டது. இது குறித்து முதுமலை வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தர்மபுரியில் பிடிபட்டது 14 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஆகும். இந்த யானை மனிதர்களை தாக்கும் சுபாவம் கொண்டதல்ல. அவுட்டுக்காய் போன்று ஏதோ ஒன்றை கடித்ததில் இதன் வாயில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வனத்துக்குள் உணவு தேட‌ முடியாத காரணத்தால், விளை நிலங்களுக்குள் புகுந்துள்ளது.

தர்மபுரி பகுதியில் இந்த யானைக்கு அச்சுறுத்தலும் இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து உயரதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில், யானை பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளது. யானை விடுவிக்கப்பட்ட அசுவரமட்டம் பகுதியில் அண்மையில் வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குட்டை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் சோலார் மூலம் இயங்கும் ஆழ்துளை கிணறு உள்ளது. இதனால் இந்த யானைக்கு தண்ணீர் மற்றும் உணவிற்கு பாதிப்பில்லை. யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்’’ என்றார்.

Related Stories:

>