×

வாக்குப்பதிவின்போது மட்டும் சானிடைசர், மாஸ்க் கொடுத்தால் போதுமா? ‘ஈவிஎம்’ பாதுகாக்கும் மையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் ‘ஜீரோ’.. அண்ணா பொறியியல் கல்லூரியில் அவலம்

சின்னாளபட்டி: திண்டுக்கல் மாவட்ட தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ரெட்டியார்சத்திரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காததால் போலீசாருக்கும், அரசியல் கட்சிகளின் ஏஜென்ட்களுக்கும் தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், நத்தம், பழநி, நிலக்கோட்டை, வேடசந்தூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் வாக்குகள் பதிவான இயந்திரங்களை (ஈவிஎம்),  ரெட்டியார்சத்திரம் அண்ணா பொறியியல் கல்லூரியில் வைத்து, மூன்றடுக்கு பாதுகாப்பு போட்டுள்ளனர்.

வாக்குப்பதிவு இயந்திரங்களை வைத்திருக்கும் அறைகளில் சிசிடிவி பொருத்தப்பட்டு, அரசியல் கட்சி ஏஜென்ட்கள் மானிட்டர் மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் அரசியல் கட்சிகளின் ஏஜென்ட்கள் 3 முதல் 4 பேர் என 7 தொகுதிக்கும் சுமார் 200 பேர் வரை சுழற்சி முறையில் வந்து செல்கின்றனர். போலீசாரும் நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்புக்கு வந்து செல்கின்றனர். கொரோனா 2வது அலை பரவலால் தொற்றின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அண்ணா பொறியியல் கல்லூரிக்கு வரும் நபர்களை, வாயிலில் வைத்து தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்வதில்லை. சானிடைசர், முகக்கவசம் கொடுப்பதில்லை. மருத்துவக்குழுவினர் இல்லாததால் பாதுகாப்பு பணிக்கு வரும் போலீசார் பதிவேட்டில் மட்டும் கையெழுத்து போட்டுவிட்டுச் செல்கின்றனர்.

இதனால், போலீசாருக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளது. எனவே, அண்ணா பொறியியல் கல்லூரி நுழைவு வாயிலில் மருத்துவர் குழுவினரை நியமித்து, கல்லூரிக்கு வரும் போலீசார், அரசியல் கட்சி ஏஜென்ட்களுக்கு தெர்மல் சோதனை செய்ய வேண்டும். சானிடைசர், முகக்கவசம் கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். வாக்குப்பதிவின்போது கையுறை வழங்கிய தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு இயந்திரங்களை வைத்திருக்கும் கல்லூரியில் மட்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags : EVM ,Anna College of Engineering , Is it enough to give sanitizer and mask only during voting? Security measures at ‘EVM’ protection center ‘Zero’ .. Disgrace at Anna Engineering College
× RELATED கர்நாடகாவில் இவிஎம் உடைக்கப்பட்ட...