×

யுகாதியையொட்டி 4 நாட்களுக்கு மாதேஸ்வரன் மலை கோயிலில் வெளியூர் பக்தர்களுக்கு தடை

மேட்டூர்: மேட்டூர் அடுத்த மாதேஸ்வரன் மலை கோயிலில், யுகாதி பண்டிகையையொட்டி 4 நாட்களுக்கு வெளியூர் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக- கர்நாடக எல்லையில் உள்ளது மாதேஸ்வரன் மலை கோயில். சாம்ராஜ் நகர் மாவட்டம் கொள்ளேகால் பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு கர்நடக மாநில மக்கள் மட்டுமின்றி தமிழகத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர். யுகாதி பண்டிகையின் போது, லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் திரள்வர். நாளை(10ம் தேதி) முதல் 13ம் தேதி வரை சுவாதி திருவிழா துவங்குகிறது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இம்மாதம் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை 4 நாட்களுக்கு வெளியூர் பக்தர்கள் மாதேஸ்வரன் மலை கோயிலுக்கு வர தடை  விதிக்கப்பட்டுள்ளதாக கோயில் செயலாளர் ஜெய விபவ சுவாமி அறிவித்துள்ளார்.

நான்கு தினங்களும் சுவாமிக்கு வழக்கமாக நடைபெறும் பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறும்.  மாதேஸ்வரன் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் கோயில் பணியாளர்கள், அதிகாரிகள் மட்டுமே, இந்த திருவிழாவில் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக-கர்நாடக எல்லையான பாலாறு சோதனைச்சாவடியில், கண்காணிப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், கொள்ளேகால் பகுதியிலும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். வெளியூர் பக்தர்கள் வந்தால், அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags : Matheswaran hill temple ,Yugadi , Foreign devotees banned from Matheswaran hill temple for 4 days due to Yugadi
× RELATED திருப்பதி, சித்தூர், ஸ்ரீகாளஹஸ்தியில் யுகாதி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்