×

வேலூரில் உள்ள மண்டிக்கு முன்பருவ மாங்காய் வரத்து தொடங்கியது: ரூ80 முதல் ரூ200 வரை விற்பனை

வேலூர்: வேலூர் மண்டிக்கு முன்பருவ மாங்காய் வரத்து தொடங்கி உள்ளதால் கிலோ ரூ80 முதல் ரூ200 வரை விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் மா உற்பத்தியில் வேலூர் மாவட்டம் முக்கிய பங்கு வைக்கிறது. ஆண்டுதோறும், ஜனவரி மாதம் பூத்து கோடை விடுமுறை நாட்களில் மாம்பழம் சீசன் களைகட்டும். மாவட்டத்தில் அணைக்கட்டு, லத்தேரி, குடியாத்தம், காட்பாடி போன்ற பகுதிகளில் மாம்பழங்கள் விளைகின்றன. வழக்கமாக, ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே முன்பருவ ரக மாம்பழங்கள் விற்பனைக்கு வந்துவிடும். இந்த ஆண்டு பருவ மழை போதுமான அளவு பெய்துள்ளது.

இதனால் கிணற்று பாசனம் மற்றும் போர்வெல் தண்ணீர் பாசனம் மூலம் மா சாகுபடி செய்துள்ள தோப்புகளில் விளைந்த முன்பருவ ரகமான செந்தூரா, பீத்தர், பங்கனப்பள்ளி, காலபாடி இமாம்பசந்த் போன்றவை அறுவடை செய்யப்பட்டு வருகிறது. மாங்காய் சீசன் தொடக்கத்தில் அதிக விலை இருக்கும் என்பதால், சில வியாபாரிகள் சீராக வளர்ச்சியடையாத மாங்காய்களை பறித்து விற்பனைக்கு எடுத்து வருகின்றனர். மேலும் வரும் நாட்களில் கோடை காலத்தில் வழக்கமாக வீசும் காற்று பலமாக இருந்தால் மாங்காய்கள் உதிர்ந்து, சேதமடையும் என்பதால், விவசாயிகள் முன் கூட்டியே காய்களை அறுவடை செய்ய துவங்கியுள்ளனர்.

வேலூர் மாங்காய் மண்டிக்கு தற்போது குறிப்பிட்ட சில ரக மாங்காய்கள் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த மாங்காய் குடியாத்தம், பேர்ணாம்பட்டு, கணியம்பாடி, லத்தேரி, பொன்னை போன்ற பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. பங்கனப்பள்ளி, இமாம்பசந்த், காலபாடி ஆகிய ரகங்கள் ரூ70 முதல் ரூ200 வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது குறைந்த அளவில் மட்டுமே மாங்காய் வரத்து உள்ளது. இன்னும் 15 நாட்களுக்கு பிறகு மாங்காய் வரத்து அதிகமாக இருக்கும். விலையும் சற்று குறைய வாய்ப்பு உள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Mangai ,Manti ,Vellore , Vellore, Mango, Sale
× RELATED தாசம்பாளையத்தில் நூற்றாண்டு பழமை...