×

மத்திய பஸ் நிலையத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மத்திய பஸ் நிலையத்தில் மீண்டும் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதால், பயணிகள் அவதிப்படுகின்றனர். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொள்ளாச்சி நகரில் உள்ள மத்திய மற்றும் புதிய பஸ் நிலையங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில், மத்திய பஸ் நிலையத்திலிருந்து கிராமபுறம் மட்டுமின்றி வெளி மாவட்டத்துக்கு அதிகளவு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் பகல் மற்றும் இரவு என எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால், மத்திய பஸ் நிலையத்தின் உள் பகுதி மற்றும் வெளியேயும் நாளுக்குநாள் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பால், அங்கு வரும் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

அதிலும், பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகளுக்கான அமைக்கப்பட்ட நிழல்கூரை பகுதியில் தற்போது சிறுசிறு பெட்டிகடைகள் அதிகரித்துள்ளது. மேலும், பயணிகள் இருக்கையிலும் பொருட்களை வைத்து வியாபாரம் செய்யப்படுகிறது.
 இதில், கடந்த சிலவாரமாக பயணிகள் நடந்து செல்லும் பாதையை ஆக்கிரமித்து தரையில் பொருட்களை வைதது விற்பனை நடக்கிறது. இதனால் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் நடந்து செல்லவும், ஒரு இடத்தில் நிற்பதற்குகூட இடம் கிடைக்காமல் தவிப்புக்குள்ளாகின்றனர். பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பால் பயணிகள் அவதிப்படுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் உள்ளன.

ஆனால், அதிகாரிகளோ, அதனை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதால் நாளுக்குநாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து, வரும் நாட்களில், பயணிகள் நிழல்கூரை பகுதி இல்லாமல், சிறு வணிக பகுதியாக மாறிவிடும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தபட்ட அதிகாரிகள் பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி பயணிகளுக்கு உரிய வசதி ஏற்படுத்த வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Central Bus Station , Re-occupation at Central Bus Station
× RELATED நீலகிரியில் அடுத்த ஓராண்டிற்குள்...