×

சாணார்பட்டி அருகே கிராமத்தில் மீன்பிடி திருவிழா: மீன்களை அள்ளிச்சென்ற பொதுமக்கள்

கோபால்பட்டி: சாணார்பட்டி அருகே, புகையிலைப்பட்டி கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்த மீன்பிடி திருவிழாவில் நேற்று ஏராளமானோர் கலந்து கொண்டு, மீன் பிடித்துச் சென்றனர். திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே, புகையிலைப்பட்டி கிராமம் உள்ளது. இக்கிராமம் அருகே வலை எடுப்பான்குளம் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு குளம் நிறைந்ததால், ஊர் மக்கள் சார்பில் மீன் குஞ்சுகள் வாங்கி விடப்பட்டது. இந்நிலையில், மீன் குஞ்சுகள் வளர்ந்து நேற்று குளத்தில் மீன்பிடி திருவிழா நடந்தது. முன்னதாக நேற்று காலை குளக்கரையில் உள்ள கொக்கி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. அதன்பின் குளத்தில் கிராம மக்கள் வலை வீசி மீன் பிடிக்கத் தொடங்கினார்.

விரால், கெண்டை, குறவை, சப்பாத்தி கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை பொதுமக்கள் அள்ளிச் சென்றனர். கோடை காலத்தில் நடந்த மீன்பிடி திருவிழா, பொதுமக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இது குறித்து தாஸ் என்பவர் கூறுகையில், ‘சாணார்பட்டி ஒன்றியத்தில் கடந்த 10 ஆண்டுகளாக போதிய மழை இல்லை. குடிநீருக்கு கூட மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்தாண்டு நல்ல மழையால் குளங்கள் நிரம்பின. இதையடுத்து குளங்களில் மீன் குஞ்சுகளை வாங்கி விட்டோம். இக்குஞ்சுகள் பெரிதானதால், ஊர் சார்பில் மீன்பிடி திருவிழா நடந்தது. பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக மீன்பிடித்து சென்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Sanarpatti , Fishing festival in the village near Sanarpatti: The public who donated fish
× RELATED கிணற்றில் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளை மீட்பு