ஓடம் போக்கி ஆற்றை முழுமையாக தூர்வார வேண்டும்: திருவாரூர் பகுதி மக்கள் கோரிக்கை

திருவாரூர்: திருவாரூர் ஓடம்போக்கி ஆற்றை முழுமையாக தூர்வார வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் நகரத்தின் மையப் பகுதியின் வழியாக செல்கிறது ஓடம் போக்கி ஆறு. இந்த ஆறு தூர் வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இதன் காரணமாக ஆற்றில் காட்டா மணக்கு செடிகள், நாணல்கள் மற்றும் தேவையற்ற செடி கொடிகள் வளர்ந்து ஆங்காங்கே புதர் மண்டி காணப்படுகிறது. குறிப்பாக திருவாரூர் நகர பகுதியில் தேங்கி கிடக்கும் தண்ணீரில் செடிகள் வளர்த்து உள்ளதால் நீர் மாசடைந்து அப்பகுதி முழுவதும் துர் நாற்றம் வீசுவதோடு தொற்று நோய்கள் பரவும் அபாயம் நிலவுகிறது. மேலும், நகரத்தில் உள்ள பல்வேறு கடைகள், வீடுகள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த ஆற்றில் தான் கலக்கிறது.

எனவே, ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுத்து ஓடம் போக்கி ஆற்றை உடனடியாக தூர் வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள், சுற்றுச் சூழல் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், திருவாரூர் ஓடம்போக்கி ஆற்றுக்கு என தனி சிறப்பு உள்ளது. ஒரு காலக் கட்டத்தில் நாகப்பட்டினத்தில் துறைமுகம் இருந்த போது ஓடங்கள் மூலம் இந்த ஆற்றின் மூலம் பெரிய அளவில் வணிகம் நடைபெற்று வந்தது. ஓடங்கள் சென்ற ஆறு என்பதால் காலப்போக்கில் ஓடம் போக்கி ஆறு என பெயர் பெற்றது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த ஆற்றின் நிலை முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் இன்றைக்கு பரிதாபமான நிலையில் உள்ளது.

ஓடம் போக்கி ஆற்றின் நிலை குறித்து பல முறை அதிகாரிகளின் கவணத்திற்கு கொண்டு சென்றும் பலனில்லை. எனவே, சம்பந்தப் பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் ஓடம் போக்கி ஆற்றை நேரில் பார்வையிட்டு உரிய நிதி ஒதுக்கீடு செய்து தற்போதைய கோடைக் காலத்தை பயன்படுத்தி முழுமையாக தூர் வாரி ஆரூர் நகரத்தின் தொன்மையை காக்க வேண்டும் என்றார்.

Related Stories:

>