×

தென் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தென் தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில்; இலங்கை மற்றும் அதையொட்டிய கடற்பகுதியில், 1.5 கி.மீ உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்களில், இன்று முதல் 12ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அத்துடன், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். சென்னையில் அதிகபட்சம், 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். கடந்த, 24 மணி நேரத்தில், 1 செ.மீ அளவுக்கு எந்த இடத்திலும் மழை பெய்யவில்லை.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து அதிகப்படியான வெப்பநிலை நிலவுகிறது. இதனால் பகல் நேரங்களில் அனல்காற்று வீசி வருகிறது. இதன் தாக்கம் இரவு வரை நீடிக்கிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மதிய நேரங்களில் வாகனங்களில் பயணிப்போர் கண் எரிச்சல் போன்ற பிரச்னைகளை சந்திக்கின்றனர். மேலும் அதிகப்படியான வெயில் காரணமாக பகல் நேரங்களில் வெளியில் வருவதையே பலரும் தவிர்த்து வருகின்றனர். அந்த அளவிற்கு வெயிலின் தாக்கம் நாளுக்கு, நாள் அதிகமாக இருக்கிறது.

நேற்று மட்டும் தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது. அதாவது அதிகபட்சமாக மதுரையில் 101.84 டிகிரி, திருச்சி 100.76 டிகிரி, திருப்பத்தூர் 100.76 டிகிரி, பாளையங்கோட்டை 100.58 டிகிரி, மதுரை விமான நிலையம் 100.4 டிகிரி, கரூர் பரமத்தி 101.3 டிகிரி வெயில், ஈரோடு 101.12 டிகிரி வெயில், தர்மபுரி 100.4 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. இதேபோல் மேலும் பல மாவட்டங்களில் 95 டிகிரிக்கு மேலாக வெயில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai Meteorological Center , Chance of rain in southern districts for next 4 days: Chennai Meteorological Center
× RELATED மார்ச் 18-ம் தேதி தென் தமிழகத்தில்...