ஜெயலலிதா நினைவிடத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதி: அறிவுசார் மையம், அருங்காட்சியகமும் திறப்பு

சென்னை: ஜெயலலிதா நினைவிடத்தை பொதுமக்கள் பார்வையிட இன்று காலை முதல் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அறிவு சார் பூங்கா, அருங்காட்சியகமும் திறக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடம் அமைந்துள்ள வளாகத்திலேயே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. இதை கடந்த ஜனவரி 27ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இதை தொடர்ந்து பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அறிவுசார் பூங்கா மற்றும் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ள வேண்டியிருந்ததால் ஒரு வாரத்தில் ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது.

இப்பணிகளை பிப்ரவரி 20ம் தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனாலும், பணிகளை முடிக்க முடியாத நிலையில் அறிவுசார் பூங்கா, அருங்காட்சியகத்தை கடந்த பிப்ரவரி 24ம் தேதி முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார். தொடர்ந்து, பணிகள் மேற்கொள்ள வேண்டியிருந்ததால் திறக்கப்பட்ட 2 மணி நேரத்தில் மீண்டும் ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டது. இந்த நிலையில், ஜெயலலிதா நினைவிடத்தில் அருங்காட்சியகம், அறிவுசார் பூங்கா அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. இதை தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்தை பொதுமக்கள் பார்வையிட இன்று காலை 10 மணி முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவிடத்தில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகம், அறிவுசார் பூங்காவும் இன்று முதல் திறக்கப்பட்டன. இதையடுத்து ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிட வந்த பொதுமக்கள் அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்காவில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை கண்டுகளித்தனர். 

Related Stories:

>