விடுதலை புலிகள் அமைப்பின் காவல் படையை போன்று தோற்றம் தரும் சீருடையை வடிவமைத்தாக யாழ்ப்பாணம் மாநகர மேயர் கைது

யாழ்ப்பாணம்: விடுதலை புலிகள் அமைப்பின் காவல் படையை போன்று தோற்றம் தரும் சீருடையை வடிவமைத்தாக குற்றம் சாட்டி யாழ்ப்பாணம் மாநகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை தீவிரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் மாநகரத்தில் பொது இடத்தில் குப்பைகளை கொட்டுவதையும், வெற்றிலை எச்சில்  துப்புவோரையும் கண்டறிந்து அபராதம் விதிப்பதற்காக தனிப்படை ஒன்றை யாழ்ப்பாணம் மாநகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஏற்படுத்தினார்.

இந்த சிறப்பு படையினருக்கான சீருடையை வடிவமைத்தது குறித்து இலங்கையில் பரவலாக சர்ச்சைகள் எழுந்தன. விடுதலை புலிகள் இயக்கத்தின் காவல்துறை பிரிவினரின் சீருடை போன்று இருப்பதாக பல்வேறு சிங்கள அமைப்புகள் புகார் தெரிவித்தனர். இது குறித்து விளக்கமளிக்குமாறு காவல்துறை அனுப்பிய சம்மனை ஏற்று யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் நேற்று இரவு ஆஜரானார். அவரிடம் இலங்கை தீவிரவாத தடுப்பு பிரிவினர் 6 மணிநேரம் தீவிர விசாரணை நடத்தினர்.

நகராட்சி ஊழியர்களை எளிதில் அடையாளம் காணும் வகையிலேயே சீருடையை வடிவமைத்ததாகவும், இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும் மணிவண்ணன் விளக்கமளித்தார். ஆனால் அதனை ஏற்க மறுத்த அதிகாரிகள் யாழ் நகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை கைது செய்தனர்.

பின்னர் மேல் விசாரணைக்காக வவுனியாவில் உள்ள தீவிரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு அவரை அழைத்து சென்றுள்ளனர். இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலை புலிகள் அமைப்பை உருவாக்க முயற்சி செய்த குற்றச்சாட்டின் கீழ் மணிவண்ணன் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

Related Stories:

>