×

வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு செல்லப்பட்டது முழுக்க முழுக்க விதிமீறலே; மறு வாக்குப்பதிவுக்கு வாய்ப்பு: சத்யபிரதா சாகு

சென்னை வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு செல்லப்பட்டது முழுக்க முழுக்க விதிமீறலே என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 6-ம் தேதி மாலை 7 மணியுடன் முடிவடைந்தது. பல இடங்களில் வாக்குப்பதிவு மையத்திற்குள் அதிமுகவினர் அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதேபோல், வேளச்சேரி தொகுதியில் பல வாக்குசாவடிகளில் அதிமுகவினர் கடைசி நேரத்தில் கள்ள ஓட்டுகள் போட முயன்றனர். அதை காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சியினர் முறியடித்தனர். ஆனாலும் பல இடங்களில் முறைகேடுகள் நடந்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் தரமணி 100 அடி சாலையில் 3 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அடையாளம் தெரியாத 3 நபர்கள் மோட்டார் பைக்கில் கொண்டு சென்றனர்.

அப்போது அவ்வழியாக தனியார் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர், வாக்குப்பதிவு இயந்திரங்களை 2 பைக்கில் எடுத்து செல்வதை பார்த்து அவர்களை வழிமறித்துள்ளார். ஆனால், வாக்குப்பதிவு இயந்திரத்தை கொண்டு சென்ற 3 பேரும் அந்த ஊழியருக்கு எந்தவித பதிலும் சொல்லாமல் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் தங்களது வாகனத்தை விரைவாக ஓட்டிச்சென்றனர். இதனால், உணவு டெலிவிரி ஊழியர் வாக்குப்பதிவு இயந்திரத்தை கடத்துகிறார்கள் என சத்தமாக கூச்சலிட்டார். அப்போது சாலையில் இருந்த பொதுமக்கள் பைக்கில் வாக்குபதிவு இயந்திரத்தை எடுத்து சென்ற 3 பேரையும் பொதுமக்கள் வழிமறித்து பிடித்து சரமாரியாக உதைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் மற்றும் திமுகவினர் நிகழ்விடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதற்குள் அவரச அவசரமாக போலீசார் பொதுமக்களிடம் இருந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை கடத்தி வந்த 3 நபர்கள் மற்றும் 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள், அவர்கள் வந்த  பைக்கையும் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்களை பொதுமக்களிடம் இருந்து மீட்டு விசாரித்தனர். அதில் வாக்கு இயந்திரங்களைக் கொண்டு சென்றது மாநகராட்சி ஊழியர்கள் என்பது தெரியவந்தது. பைக்கில் எடுத்துச் செல்லப்பட்டது தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் அல்ல என்றும், பழுதான 2 விவி பேட் இயந்திரங்களும், 2 மாற்று இயந்திரங்களும்தான் ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்டது என்றும் தேர்தல் அதிகாரி பிரகாஷ் அறிக்கையில் விளக்கமளித்திருந்த நிலையில், சம்பந்தப்பட்ட அந்த மாநகராட்சி ஊழியர்களுக்குப் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு செல்லப்பட்டது முழுக்க முழுக்க விதிமீறலே. பைக்கில் கொண்டு செல்லப்பட்ட விவிபேட் 50 நிமிடம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 15 வாக்குகள் பதிவாகியுள்ளது. இரு சக்கர வாகனத்தில் 2 பேலட் யூனிட், ஒரு கன்ட்ரோல் யூனிட், ஒரு விவிபேட் கொண்டு செல்லப்பட்டது. இவற்றில் விவிபேட் பயன்படுத்தப்பட்டுள்ளது. வேளச்சேரி சம்பவம் தொடர்பான அறிக்கை தலைமை தேர்தல் ஆணையத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட வாக்குப்பதிவு மையத்தில் மறுவாக்குப்பதிவுக்கு வாய்ப்பு உள்ளது; இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் எனவும் கூறினார்.


Tags : Vilachary ,Satyapratha Saku , In Velachery, the voting machine was taken away on a two-wheeler in complete violation; Opportunity for re-election: Satyaprada Saku
× RELATED வாக்குச்சாவடி வரிசை நிலை இணைப்பு மூலம் அறிய புதிய வசதி