×

தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு தடை: கிரிஜா வைத்தியநாதன் தகுதி குறித்து தலைமை நீதிபதி அமர்வு அதிருப்தி

சென்னை: தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதனை நேற்று முன்தினம் ஆளுநர் நியமித்திருந்தார். இந்த நியமனத்துக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் காலியாக இருக்கும் நிபுணத்துவ உறுப்பினர் பணியிடங்களுக்கு  தமிழகத்தின் தலைமைச் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற கிரிஜா வைத்தியநாதன், வருவாய் நிர்வாக ஆணையராக பணியாற்றி ஓய்வுபெற்ற சத்யகோபால் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரி அருண்குமார் வர்மா ஆகிய மூவரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதில் கிரிஜா வைத்தியநாதனுக்கு உரிய அனுபவம் இல்லாத காரணத்தினால் அவரது பணி நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில், தேசிய பசுமை தீர்ப்பாய சட்டத்தின் பிரிவு 5ன்படி  நிபுணத்துவ உறுப்பினராக நியமனம் செய்யப்பட கூடிய நபருக்கு 15 ஆண்டுகள் இந்திய ஆட்சிப்பணி அனுபவமும், அதில் 5 ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் பணியாற்றிய அனுபவமும் இருக்க வேண்டும். ஆனால், கிரிஜா வைத்தியநாதனுக்கு 15 ஆண்டுகளுக்கு மேல் இந்திய ஆட்சிப்பணி அனுபவம் இருந்தாலும், சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளின் அனுபவம்  3 ஆண்டுகள் 6 மாதம் மட்டுமே உள்ளது என்பதால் இவரது நியமனம் தேசிய பசுமைத் தீர்ப்பாய விதிகளுக்கு எதிரானது என்றும், அதனால் அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய பெஞ்ச் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கிரிஜா வைத்தியநாதன் சட்டப்படி தேவைப்படும் தகுதியை பெற்றிருக்கவில்லை என்று கூறிய தலைமை நீதிபதி கிரிஜா வைத்தியநாதன் தகுதி குறித்து அதிருப்தி வெளியிட்டார். மேலும் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனத்திற்கு தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 16-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : Kirija Vaithiyanathan ,Expert Committee of the Southern Regional National Green Tribunal ,Chief Justice , Kirija Vaithiyanathan's appointment as a member of the expert panel of the Southern Regional National Green Tribunal banned: Chief Justice dissatisfied with Kirija Vaithiyanathan's eligibility
× RELATED உச்சநீதிமன்ற வழக்கு விவரங்கள் இனி...