காரைவாய்க்கால் மாரியம்மன் கோயிலில் எளிமையாக நடந்த குண்டம் விழா: ஜேசிபி வாகன உதவியுடன் தேரோட்டம்

ஈரோடு: ஈரோடு காரைவாய்க்கால் மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த குண்டம் விழாவில் பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்கினர். அதேபோல், சின்னமாரியம்மன் கோயிலில் ஜேசிபி வாகன உதவியுடன் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஈரோடு மாநகரில் பிரசித்தி பெற்ற பெரியமாரியம்மன் மற்றும் அதன் வகையறா கோயில்களான சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் குண்டம் மற்றும் தேர்த்திருவிழாவை கொரோனா பரவல் காரணமாக எளிமையாக நடத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்தது.

இதன்பேரில், பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில்களில் கடந்த 6ம் தேதி இரவு ஒரே நேரத்தில் பூச்சாட்டப்பட்டு, விழா துவங்கியது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் 7ம் தேதி மூன்று கோயில்களிலும் கம்பம் நடப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில் குண்டம் விழாவிற்காக நேற்று முன்தினம் இரவு குண்டம் பற்ற வைக்கப்பட்டு, நேற்று காலை 6 மணிக்கு குண்டம் விழா நடந்தது. இதில், பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததால், கோயில் பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்கி தீ மிதித்தனர்.

திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு சென்றனர். தேரோட்டம்: ஈரோடு சின்னமாரியம்மன் கோயிலில் நேற்று முன்தினம் இரவு கம்பம் நடப்பட்டது. அதைத்தொடர்ந்து தேரோட்டத்திற்காக தேர் கோயில் முன் நிறுத்தப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று காலை 9 மணிக்கு தேரில் எழுந்தருளிய அம்மனை பார்த்து, பக்தர்கள் பரவச கோஷமிட்டனர், ஆனால், கொரோனா பரவல் காரணமாக குறைவான பக்தர்களே வடம் இழுக்க வந்ததால், தேரினை ஜேசிபி வாகன உதவியுடன் பின்புறம் தள்ளப்பட்டது.

முன்புறம் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதைத்தொடர்ந்து பொங்கல் விழாவும் நடைபெற்றது. இந்த விழாக்களில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து எளிமையாக நடந்தது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவில், இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குநர் மங்கையர்கரசி, பெரியமாரியம்மன் கோயில் செயல் அலுவலர் ரமணிகாந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இன்று (9ம் தேதி) இரவு 8 மணிக்கு மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும், 12ம் தேதி மாலை 3 மணியளவில் கம்பம் அகற்றும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டும் நடைபெற உள்ளது. 13ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெற உள்ளது.

Related Stories:

>