தமிழகத்தில் அதிகரிக்கும் மனித உரிமை மீறல்; தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் 2019-20ம் ஆண்டில் 6,535 வழக்கு பதிவு: இந்திய அளவில் 2வது இடம்

திருச்சி: தமிழகத்தில் மனித உரிமை மீறல் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி 2019-20ம் ஆண்டில் மட்டும் 6,535 வழக்குகள் பதிவாகி உள்ளது. அனைத்து அடிப்படை உரிமைகளும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் மிக முக்கியமான அம்சம் ஆகும். குறிப்பாக கருத்துச்சுதந்திரம், எழுத்துரிமை, கல்வி, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பெற்று வாழ்வதற்கான உரிமை அனைத்து மனிதர்களுக்கும் உண்டு. இயற்கையாக அளிக்கப்பட்ட அனைத்து உரிமைகளும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளது. இவ்வாறு இயற்றப்பட்டுள்ள சட்டங்களை மீறி நடைபெறும் சம்பவங்கள் மனித உரிமை மீறல் ஆகும்.

மனித உரிமை மீறல் தொடர்பான பதிவாகும் புகார்கள் மீது விசாரணை நடத்த தேசிய மற்றும் மாநில அளவில் மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் செயல்பட்டு வரும் தேசிய அளவில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி செயல்படுவார். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி, உயர்நீதிமன்ற நீதிபதி, மனித உரிமைகள் செயற்பாட்டில் ஈடுபாடு கொண்ட இருவர், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, சிறுபான்மையின மற்றும் பெண்கள் உரிமைகள் ஆணைய தேசிய தலைவர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள். இதைப்போன்று ஒவ்வொரு மாநிலத்தில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் மாநில மனித உரிமை ஆணையம் செயல்பட்டு வருகிறது. இவற்றிலும் 2 உறுப்பினர்கள் இருப்பார்கள். பொதுமக்கள் உள்ளிட்ட யாராக இருந்தாலும் மனித உரிமை மீறல் தொடர்பாக இந்த ஆணையங்களில் புகார் அளிக்கலாம்.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு ஆன்ைலன் மூலமும், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் எழுத்து மூலம் புகார் அளிக்கலாம். இந்த புகார் மீது தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்கள் விசாரணை நடத்தும். இந்த விசாரணை முடிவில் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட நபர்கள் மீது அரசுக்கு பரிந்துரைகளை அனுப்பும். இதைத்தவிர்த்து முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் தொடர்பாக தாமாக முனவந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தும் அதிகாரமும் மனித உரிமைகள் ஆணையத்திற்கு உண்டு. இதன்படி கடந்த 2019- 20ம் ஆண்டு ேதசிய மனித உரிமைகள் ஆணையத்தில் மொத்தம் 76,628 வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக உத்திர பிரதேச மாநிலத்தில் மொத்தம் 32 ஆயிரத்து 693 வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 6,535 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதைத்தவிர்த்து டெல்லியில் 5,842 வழக்குகளும், ஓடிசாவில் 4,150 வழக்குகளும், பீகாரில் 3,218 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2020 - 21ம் ஆண்டில் கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி வரை தமிழகத்தில் மொத்தம் 4,248 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் உள்ள உத்திர பிரதேசத்தில் மொத்தம் 27 ஆயிரத்து 958 வழக்குகளும், 2வது இடத்தில் உள்ள டெல்லியில் மொத்தம் 5,461 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாநில ஆணையமும் வழக்கு

தேசிய ஆணையம் தவிர்த்து மாநில மனித உரிமைகள் ஆணையத்திலும் தனியாக வழக்குகள் பதிவு செய்யப்படும். இது தொடர்பான எண்ணிக்கை சம்பந்தப்பட்ட மாநில மனித உரிமைகள் ஆணையம் அல்லது மாநில அரசுகள் வெளியிடும்.

எந்த புகார் அதிகம்?

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவாகும் வழக்குகளில் குழந்தைத் தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், பெண்கள் மீதான வன்முறைகள், சிறை மரணங்கள், தாழ்த்தப்பட்டவர்கள் மீதான வன்கொடுமைகள் உள்ளிட்டவைகள் தொடர்பான புகார்கள்தான் அதிகம் பதிவாகிறது.

Related Stories:

>