×

இரவு நேர ஊரடங்கு, ஜிம்கள், பார்ட்டி ஹால்கள் மூடல்: கர்நாடக, உத்தரப் பிரதேச அரசுகள் அதிரடி!!

பெங்களூரு: கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கர்நாடகாவில் சனிக்கிழமை முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.இந்தியாவில் 10 மாநிலங்களில் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. இதில் கர்நாடகம், தமிழகம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், டெல்லி, மத்திய பிரதேசம், குஜராத், கேரளம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் அடங்கும். இதையடுத்து அந்தந்த மாநிலங்கள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது. மும்பை உள்ளிட்ட நகரங்களில் மதுபானங்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நோய் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி மதுபானங்களை டோர் டெலிவரி செய்யய மும்பை காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

இதனிடையே கர்நாடக மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தலைநகர் பெங்களுருவில் ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள ஏழு நகரங்களில் இரவு ஊரடங்கு விதிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. பெங்களூரு, மைசூரு, மங்களூரு, கலாபுராகி, பிடார், மணிபால், துமாகுரு ஆகிய ஏழு நகரங்களில் ஏப்ரல் 10ம் தேதி முதல் 20ம் தேதி வரை அமலாகி வருகிறது. அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, நீச்சல் குளம், ஜிம்கள் பயன்படுத்த தடை, அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பார்ட்டி ஹால்களை பயன்படுத்தக் கூடாது. எந்த நோக்கத்துக்காகவும், கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை மற்றும் பொது விழாக்கள் நடத்தவும் கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.

இதே போல் உத்தரப் பிரதேச மாநிலங்களில் 6 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. லக்னோ, வாரணாசி, கான்பூர், பிரயாக்ராஜ், காசியாபாத், நொய்டா ஆகிய 6 மாவட்டங்களில் வரும் 17ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.


Tags : Karnataka ,Uttar Pradesh , கர்நாடகா
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...