வீட்டிற்கு ஒரு உறுப்பினர், உறுப்பினருக்கு ஒரு புத்தகம்: மாவட்ட நூலகத்துறை புது திட்டம்

கோலார்: கொரோனா தொற்று பரவல் காரணமாக நூலகம் வந்து படிப்பதை தவிர்க்க ‘‘ வீட்டிற்கு ஒரு உறுப்பினர், உறுப்பினருக்கு ஒரு புத்தகம்’’ என்ற புதிய டிஜிட்டல் நூலக திட்டத்தை கோலார் மாவட்ட தலைமை நூலக துறை அறிமுகம் செய்துள்ளது. ஒவ்வொரு மனிதர்களின் அறிவு வளர்ச்சிக்கு புத்தகம் படிப்பது அவசியம் என்ற கருத்தை பல மேதைகள் கூறியுள்ளனர். மக்களிடம் படிக்கும் ஆர்வம் தூண்ட வேண்டும் என்ற நோக்்கத்தில் மாநகரம் தொடங்கி கிராமங்கள் வரை நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் நாளிதழ்கள், வார, மாத இதழ்கள், வரலாறு, அறிவியல், இலக்கியம், இலக்கணம், விளையாட்டு, கல்வி, சமையல், பொது அறிவு உள்பட பல புத்தகங்கள் இடம் பெற்றிருக்கும். மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் ஆர்வமுடன் படிப்பார்கள்.

கொரோனா தொற்று காரணமாக நூலகங்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் தின நாளிதழ் உள்பட புத்தகம் படிக்கும் ஆர்வமுள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வசதிக்காக கோலார் மாவட்ட நூலக துறை கடந்தாண்டு நவம்பர் மாதம் டிஜிட்டல் நூலகம் என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் படிக்கும் ஆர்வர் உள்ளவர்களை உறுப்பினர்களாக சேர்க்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக தனியாக தயாரித்துள்ள வாகனங்கள் நகரம் தொடங்கி கிராமங்கள் வரை செல்கிறது.

டிஜிட்டல் நூலகத்தில் இலவசமாக உறுப்பினர்கள் சேர்த்து வருகிறது. இதில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளவர்கள் தங்களிடம் உள்ள செல்போன், டேப், லாப்டாப், கம்ப்யூட்டர் ஆகியவற்றில் நாளிதழ்கள், வார இதழ்கள், வேண்டிய புத்தகங்கள் படிக்கும் வசதி ஏற்படுத்தியுள்ளது. இது தவிர மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம், பல்கலைகழக மானிய குழு, நெட் உள்ளிட்ட தேர்வுகள் தொடர்பான விவரங்களும் டிஜிட்டல் நூலகத்தில் இடம் பெற்றுள்ளது.

இத்திட்டத்தை மேலும் விரிவுப்படுத்தும் நோக்கத்தில் ‘‘வீட்டிற்கு ஒரு உறுப்பினர், உறுப்பினருக்கு ஒரு புத்தகம்’’ என்ற திட்டத்தை மாவட்ட நூலக துறை தொடங்கியுள்ளது. நகர பகுதி மட்டுமில்லாமல் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று வீட்டில் உள்ளவர்களில் ஒருவரை டிஜிட்டல் நூலகத்தில் உறுப்பினராக்கும் பணியை தொடங்கியுள்ளது. மேலும் டிஜிட்டல் நூலகத்தில் உறுப்பினராக விரும்புவோர் 08152-222821 மற்றும் 9845228125 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நூலக துறை தெரிவித்துள்ளது.

Related Stories:

>