கோலார் மாவட்ட கூட்டுறவு வங்கி நடமாடும் ஏடிஎம்: எம்எல்ஏ ரூபகலா தொடங்கி வைத்தார்

தங்கவயல்: கோலார் மாவட்ட கூட்டுறவு வங்கி (டி.சி.சி.) யின் சார்பில் நடமாடும் ஏ.டி.எம்.வாகனத்தை தங்கவயலில் எம் எல் ஏ ரூபகலா சசிதர் தொடங்கி வைத்தார்.

தங்கவயல் உரிகம் ஸ்கேட்டிங் அரங்கில் மகிளா மிலன் மகளிர் சங்கத்தினருக்கு வங்கி கடனுதவி வழங்கும் விழா டி.சி.சி.வங்கியின் தலைவர் கோவிந்த கவுடா தலைமையில் நடந்தது.இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எம்எல்ஏ ரூபகலா சசிதர் பேசும் போது, ‘‘தங்கவயலில் கூட்டுறவு வங்கி மூலம் பெண்கள் சொந்த காலில் நின்று சுய தொழில் புரிய வங்கி கடனுதவி வழங்கிய போது, பெரிய வங்கிகள் அனைத்தும் மகளிர் சங்கங்களுக்கு கடனுதவி வழங்கினால், அதை மகளிர் சங்கத்தினர் திருப்பி செலுத்த மாட்டார்கள் என்று பயமுறுத்தினார்கள்.

மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் ‘ கடனுதவி பெற்ற மகளிர் சங்கத்தினருக்கு , கடனை திருப்பி செலுத்த வேண்டாம் என்று தவறாக வழி நடத்தினார்கள். அதையெல்லாம் மீறி கூட்டுறவு வங்கி பல கோடி மதிப்பில் பெண்கள் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கியது.அதை முறையாக , தவறாமல் தவணை தொகை கட்டி மீண்டும், மீண்டும் வங்கி கடனுதவி பெற்று மகளிர் குழுக்களின் பெண்கள் பல் வேறு சுய தொழில் செய்து, முன்னேற்றம் கண்டு வருகின்றனர்.மேலும் இந்த மகளிர் குழுக்களுக்காக கூட்டுறவு வங்கி பல்வேறு திட்டங்களையும் தீட்டி வருகிறது. அதன் படி , மகளிர் குழு உறுப்பினர்களுக்கு பல் வேறு சிறு தொழில் பயிற்சிகளை அளித்து , பெண்களே சிறு தொழில் கூடங்களை அமைக்க, கடன் உதவியும் அளித்து , பெண்களை சிறு தொழில் உரிமையாளர்களாக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் மாவட்ட கூட்டுறவு வங்கி மூலம் முதன் முதலாக நடமாடும் ஏ.டி.எம். வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. வாகனத்தின் ஒரு புரம் இயந்திரம் மூலம் ஒரு நாளைக்கு ₹20 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம்.வாகனத்தின் மறுபுறம் உள்ள கவுண்டரில் செலான் எழுதி ஊழியரிடம் பணம் பெறலாம். உங்களுக்கு பணம் தேவைப்படும் போது மொபைல் போனில் தகவல் தெரிவித்தால் உங்கள் பகுதிக்கே ஏ.டி.எம்.வாகனம் வரும்’’. தன் பேச்சு முழுவதும் தமிழில் பேசிய எம்எல்ஏ ரூபகலா சசிதர் மகளிர் சங்கத்தினருக்கு முன்னதாக ‘‘தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்”  என்று வாழ்த்தும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் நகரசபை தலைவர் வள்ளல் முனிசாமி, மகிளா மிலன் தலைவி ஆரிட் புருசோத்தமன் , நாராயணரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>