×

டெல்லியில் வேகமாக பரவும் கொரோனா அலையை தடுக்க மனு தாக்கல்: விசாரணைக்கு ஏற்க ஐகோர்ட் மறுப்பு

புதுடெல்லி : கொரோனா தொற்றுநோயின் அடுத்த அலையைக் கட்டுப்படுத்தவும், அதன்  தாக்கத்தை குறைப்பதற்கும் உடனடி நடவடிக்கைகளை எடுக்க ஆம் ஆத்மி அரசுக்கு  உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உயர் நீதிமன்றம்  மறுத்து உத்தரவிட்டது. டெல்லியில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 5,506 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த ஆண்டில் ஒரு நாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். அதேபோன்று இந்நோய்க்கு புதனன்று 20 பேர் பலியானதாகவும் ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 11,133 ஆக அதிகரித்துள்ளதாகவும் மாநில சுகாதாரத்துறை தெரிவித்தது. இந்நிலையில், நகரில் அடுத்த அலை பரவுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஆம் ஆத்மி அரசுக்கு உத்தரவிடக்கோரி வக்கீல் மல்கோஹாத்ரா என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அவரது அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: கொரோனா தொற்று நோயின் மற்றுமொரு அலை அல்லது உருமாறிய அதன் புதிய மாறுபாட்டின் தாக்கத்தைக்  கட்டுப்படுத்துவதற்கும், குறைப்பதற்கும் உடனடி நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.  கடந்த மார்ச் 15 முதல் நீதிமன்றங்கள் நேரடி விசாரணையை மீண்டும் தொடங்கியுள்ளதால், சிறைக் கைதிகள், தங்கள்  வழக்குகளுக்காக நீதிமன்றங்களுக்கு அழைத்து வரப்படுகிறார்கள். அவர்களை  உறவினர்கள் நீதிமன்ற வளாகத்தில் சந்திதது பேசுகின்றனர். இதனால், அவர்கள் மூலமாக நோய் தொற்று பரவினால், சிறையில் கொரோனா தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, அவர்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜர்படுத்திட வேண்டும்.

உள்ளூர் சந்தைகள் மற்றும் மால்கள், உணவகங்கள்  மற்றும் கபேக்கள் போன்ற ஷாப்பிங் வளாகங்களி–்ல் பெரும் மக்கள் திரள் கூடுகின்றனர். மேலும் அங்கு வரவோர் பலரும் போதுமான சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முககவசம் அணியாமலும் வருகின்றனர். எனவே, அங்கு வருவோரின் கவனக்குறைவு  தவிர்க்கப்படக்கூடிய வகையில் பொருத்தமான வழிமுறைகளை கடைபிடிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த  நீதிபதிகள் விபின் சாங்கி மற்றும் ரேகா பல்லி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், வைரஸின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எல்லாவற்றையும் செய்து வருவதாகவும், எனவே இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க விரும்பவில்லை என்றும் கூறினார். குறிப்பாக, முககவசம் அணிய கோருதல், சமூக இடைவெளி பராமரிப்பு, தடுப்பூசி போட அறிவுறுத்தல் உள்ளிட்ட அனைத்தையும் அரசு செய்து வருகிறது.

இதைத்தவிர வேறு என்ன அரசு செய்ய வேண்டும் என மனுதாரர் எதிர்பார்க்கிறார் என்று கூறி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்து உத்தரவிட்டனர். எனினும், குறிப்பிட்ட பரிந்துரைகள் மற்றும் பொருத்தமான கோரிக்கைகளை சுட்டிக்காட்டி மற்றொரு விண்ணப்பத்தை தாக்கல் செய்ய மனுதாரருக்கு அனுமதி வழங்கினர்.

Tags : Delhi ,ICC , Petition filed to curb fast-spreading corona wave in Delhi: ICC refuses to accept hearing
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு