தென் மண்டலத்திற்கு தனியாக சென்னையில் என்ஐஏ கிளை அலுவலகம் திறப்பு: கண்காணிப்பாளராக அசாம் மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீஜித் நியமனம்

சென்னை: தென் மண்டலத்திற்கு தனியாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கிளை அலுவலகம் சென்னை புரசைவாக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்திற்கு கண்காணிப்பாளராக அசாம் மாநிலத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீஜித் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் தீவிரவாதிகள் நடமாட்டம் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. குறிப்பாக தென் மாநிலங்களான கேரளா, தமிழகம், ஆந்திரா, கர்நாடாகா மாநிலங்களில் கடந்த ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து அவர்களிடம் இருந்து துப்பாக்கி மற்றும் வெடி குண்டுகள் தயாரிக்கும் பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

மேலும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளுக்கு ஆட்கள் தேர்வு செய்து அவர்களுக்கு தீவிரவாதிகள் கேரளா வனப்பகுதியில் பயிற்சி அளித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அமைப்புக்கு சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களில் நிதி வசூலித்து அனுப்பியதும் என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது. தென் இந்தியாவில் குறிப்பாக சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தை தலைமையிடமாக கொண்டு தேசிய புலனாய்வு முகமை அலுவலகம் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது.

அதைதொடர்ந்து சென்னை புரசைவாக்கத்தில் இந்த அலுவலகம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. தமிழக கிளை அலுவலகத்திற்கு அசாம் மாநிலத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீஜித் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று முன்தினம் தனது புதிய அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பதவி ஏற்றுக்கொண்டார். ஏற்கனவே, தமிழகத்தில் கிளை அலுவலகம் இல்லாததால் கிண்டியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் தற்காலிகமாக தனி அலுவலகம் செயல்பட்டு வந்தது. சென்னையில் தொடங்கப்பட்ட அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைப்பார் என்று என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

ஆனால் சட்டமன்ற தேர்தல் காரணமாக தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் புதிய அலுவலகம் அதிகாரிகளே தொடங்கி அலுவலகம் முழுமையாக செயல்பட தொடங்கி உள்ளன. வழக்கமாக தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டாலோ அல்லது தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் நபர்கள் மீது டெல்லியில் உள்ள என்ஐஏ தலைமை அலுவலகத்தில் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டு வந்தது. ஆனால் இனி தென் இந்தியாவில் தீவிரவாதிகள் தொடர்பான வழக்குகள் அனைத்து சென்னை அலுவலகத்தில் தான் வழக்கு பதிவு செய்யப்படும் என்று என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>