×

கோயம்பேட்டில் கட்டுப்பாடு விதிப்பு சில்லரை வணிக தடைக்கு வணிகர் சங்கம் எதிர்ப்பு

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக வரும் தகவல்களின் அடிப்படையில், தமிழக அரசு மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்திட நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்தே பெருந்தொற்றுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வணிகமே சீரழிந்த நிலையில், வணிகம் செய்துவரும் குடும்பங்கள் வாழ்வாதாரம் இன்றி நிர்கதியாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கோயம்பேடு வணிக வளாகம் முழுமையாக மூடப்பட்டிருந்த நிலையில், சில்லரை வணிகர்களின் வாழ்வு கேள்விக்குறியாகி இருந்தது.

ஏறத்தாழ 8 மாதங்களுக்கு பின்னர்தான் படிப்படியாக கோயம்பேடு வணிக வளாகம் திறக்கப்பட்டு, தற்போதுதான் அரை வயிற்று கஞ்சியாவது சில்லரை வணிகர்களுக்கு கிடைக்கும் நிலை எட்டப்பட்டிருக்கிறது. சில்லரை வணிகத்தில் விதிக்கப்படும் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி சுழற்சி முறையில் வணிகம் நடைபெற்று, வணிகர்கள் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்திக்கொள்ள அரசு முன்வர வேண்டும். கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள் அமலாக்கம் என்ற பெயரில், பல்வேறு துறை தலையீடுகளினால் அதிகார அத்துமீறல்கள் இருக்குமேயானால், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அவற்றை எதிர்த்து போராடவும் களம் இறங்கும் என்பதை எச்சரிக்கை உணர்வோடு தெரிவித்துக்கொள்கிறது.

Tags : Coimbatore Chamber of Commerce , Coimbatore Chamber of Commerce protests against restrictions imposed on retail trade
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...