தமிழகம் முழுவதும் மாஸ்க் அணிந்தவர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல்: தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் போடப்படும் என தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவத் தொடங்கியது முதலே மாஸ்க், சமூக இடைவெளி கட்டாயம் என அரசு கூறிவருகிறது. தற்போது கொரோனா நோய்த்தொற்றின் 2ம் அலை வேகமாகப் பரவி வருவதால் தினந்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருகிறது. மாஸ்க் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் பொதுமக்கள் அலட்சியமாக செயல்பட்டதன் காரணமாகவும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கூடும் இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் என தெரிவித்து வருகிறது.

இதேபோல், தமிழகம் முழுவதும் பெட்ரோல் பங்க்குகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் மாஸ்க் அணிவதில்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து எழுந்தவாறு இருந்தது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் இனி பெட்ரோல், டீசல் போட வேண்டும் என்றால் கட்டாயம் மாஸ்க் அணிந்து இருக்க வேண்டும் என தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சங்கத்தின் மாநில தலைவர் கே.பி.முரளி கூறியதாவது: கடந்த ஆண்டு கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோதும் மாஸ்க் அணிந்தவர்களுக்கு மட்டும்தான் பெட்ரோல் போடப்படும் என அறிவிக்கப்பட்டது. பின் படிப்படியாக நோய்ப்பரவல் குறையத் தொடங்கியதும் அது விலக்கிக்கொள்ளப்பட்டது. தற்போது கொரோனா தொற்றின் 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. எனவே வாடிக்கையாளர்கள் மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல் போடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>