×

மதுரையில் எகிறும் கொரோனா 18 இடங்களில் மீண்டும் ‘தகர சீல்’: மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

மதுரை: மதுரையில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் 18 இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அங்குள்ள தெருக்களை தகரம் கொண்டு சீல் வைக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
மதுரையில் கடந்த 15 நாட்களாக கொரோனா 2வது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 120 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். நேற்றும் இந்த பாதிப்பு நூறை கடந்தது. இதுவரையிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 800க்கும் மேற்பட்டோர் மதுரை அரசு மருத்துவமனை, தோப்பூர் முகாம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாளுக்கு நாள் எகிறும் கொரோனா பாதிப்புகளை தொடர்ந்து, மதுரை மாநகராட்சி நகரின் 100 வார்டுகளிலும் தற்போது பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. மதுரை மாநகராட்சிக்குட்பட்ட குறிப்பிட்ட 18 இடங்கள் தீவிர தொற்றுப்பகுதிகளாக கண்டறியப்பட்டன. இங்கு தகரம் வைத்து அடைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. இப்பகுதிகளில் மட்டுமே 74 பேர் தொற்றினால் பாதித்துள்ளனர். இங்கு கொரோனா தடுப்பு பணிகளை, தற்போது மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.

மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர் வீடு, வீடாக சென்று தொற்று பாதித்தவர்கள் பற்றிய கணக்கெடுப்பு பணிகளை வேகப்படுத்தியுள்ளனர். மேலும் ஒரே தெருவில் கொரோனா தொற்றில் பாதித்தவர்கள் அதிகம் இருப்பின், தகரம் போட்டு அந்த தெருவை மூடும் பணியை துவக்கியுள்ளனர். தெருக்களுக்கு உடனடியாக ‘‘சீல்’’ வைத்து, அத்தியாவசியப் பொருட்களை அங்கு வசிப்பவர்களுக்கு விநியோகம் செய்யவும் மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தொடர்ந்து தகரஷீட் தடுப்பு வைக்கும் பணி நடந்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Corona ,Madurai , Corona erupts in Madurai again in 18 places
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...