அரக்கோணம் அருகே தேர்தல் தகராறில் பயங்கரம் வி.சி. கட்சியை சேர்ந்த 2 பேர் மது பாட்டிலால் குத்தி கொலை: பொதுமக்கள் மறியல்; 4 வாலிபர்கள் கைது

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சித்தாம்பாடி கவுதம் நகர பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெருமாள் ராஜபேட்டை, சோகனூர், செம்பேடு பகுதியை சேர்ந்த வாலிபர்கள் தேர்தல் தொடர்பாக கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தனர். அவர்களுக்கிடையே திடீரென கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஒரு கும்பல் மது பாட்டில்களை உடைத்து மற்றொரு தரப்பை சேர்ந்த 4 பேரை குத்தியுள்ளனர். மேலும் கத்தி, கம்புகள், கற்களால் சரமாரி தாக்கிக்கொண்டனர். இதில் 4 பேர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். அப்பகுதியினர் 4 பேரையும் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

வழியிலேயே 2 பேர் இறந்தனர். மற்ற 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரக்கோணம் போலீசார் நடத்திய விசாரணையில், கொலையானவர்கள் சோகனூரை சேர்ந்த அர்ஜூன்(25), சூர்யா (27) என்பதும், படுகாயம் அடைந்தவர்கள்  சவுந்தர், மதன் என்பதும் தெரியவந்தது. இவர்கள் விடுதலை சிறுத்தை கட்சிக்காக தேர்தலில் பணி செய்தவர்கள் என்று கூறப்படுகிறது. பெருமாள்ராஜபேட்டையை சேர்ந்த சிலர்தான் 2 பேரை கொலை செய்துவிட்டு தப்பியதும் தெரியவந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த சோகனூர் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர், கொலையாளிகளை கைது செய்யும்படி கூறி நேற்றுமுன்தினம் இரவு முதல் நேற்றும் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த வேலூர் சரக டிஐஜி காமினி, எஸ்பி சிவக்குமார் ஆகியோர் சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராமமக்கள், ‘‘ஒரு பிரிவினர் அடிக்கடி எங்களை தாக்குகின்றனர். எனவே இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்தால்தான் உடல்களை வாங்குவோம்’’ என கூறினர். இதுதொடர்பாக அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, பெருமாள்ராஜபேட்டையைச் சேர்ந்த அஜித்(24), மதன்(37), சுரேந்தர்(19), நந்தா(20) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மாவட்ட தலைநகரில் நாளை ஆர்ப்பாட்டம்: விசிக தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோகனூர் கிராமத்தில் நடந்த இரட்டை கொலையை கண்டித்து நாளை மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

* டிராக்டர்- நெல்மூட்டைகளுக்கு தீ

அரக்கோணம் அருகே நடந்த இரட்டை கொலைகளுக்கு இடையே பெருமாள் ராஜப்பேட்டையைச் சேர்ந்த ராஜவேலு என்பவருக்கு சொந்தமான நிலத்தில் வைத்திருந்த 100க்கும் மேற்பட்ட நெல்மூட்டைகளையு டிராக்டரையும் தீ வைத்து எரித்துள்ளனர்.

Related Stories:

>