பந்தல் அமைக்க இரும்பு கம்பியை தூக்கியபோது மின்சாரம் பாய்ந்து 4 தொழிலாளிகள் பலி: ஓசூர் அருகே பரிதாபம்

ஓசூர்: தமிழக-கர்நாடக மாநில எல்லையான ஓசூர் அருகே அத்திப்பள்ளி இண்டலப்பெலே கிராமத்தில், புதிதாக அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று காலை நடைபெற இருந்தது. இதையொட்டி, அங்கு சாமியானா பந்தல் போடும் பணியில் நேற்று முன்தினம் இரவு 4 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதற்காக இரும்பு கம்பியை 4 பேரும் சேர்ந்து தூக்கி சென்றனர். அப்போது, அந்த வழியாக சென்ற உயர்மின்னழுத்த கம்பியில், இரும்பு கம்பி உரசியதாக தெரிகிறது. இதனால், இரும்பு கம்பி மூலமாக மின்சாரம் பாய்ந்ததில், கம்பியை தூக்கிச் சென்ற 4 பேரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த அத்திப்பள்ளி போலீசார், பலியான 4 பேரின் சடலங்களையும் கைப்பற்றி பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் கர்நாடக மாநிலம் பரப்பனஅக்ரஹாரா அருகே ஒசரோடு பகுதியை சேர்ந்த ஆகாஷ்(30), மகாதேவ்(35), விஷகண்டா(33), விஜய் என்ற விஜய்சிங்(30) என்பது தெரியவந்தது.

Related Stories:

>