×

ஐபிஎல் திருவிழா சென்னையில் இன்று தொடக்கம் முதல் லீக் ஆட்டத்தில் மும்பை - பெங்களூர் மோதல்: ரசிகர்களுக்கு அனுமதி இல்லை

சென்னை: ஐபிஎல் டி20 தொடரின் 14வது சீசன் சென்னையில் இன்று தொடங்குகிறது. முதல்போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மோதுகிறது. கொரோனா பீதி காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்தியாவில் கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்ட நிலையில், 14வது சீசன் இந்தாண்டு இங்கேயே நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூர், டெல்லி ஆகிய நகரங்களில் லீக் சுற்றும், நாக் அவுட் மற்றும் இறுதிப் போட்டி அகமதாபாத்திலும் நடக்க உள்ளன. கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளதை அடுத்து, எல்லா போட்டிகளும் ரசிகர்களின்றி பூட்டிய அரங்கில் நடைபெறும். முதல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் இரவு 7.30க்கு தொடங்குகிறது. அதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது. களமிறங்கும் 8 அணிகளில், அதிகமுறை கோப்பையை வென்ற அணியாக மும்பை இந்தியன்ஸ் திகழ்கிறது. அந்த அணி 5 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. 13 ஆண்டு ஐபிஎல் வரலாற்றில், மும்பை அணி கடைசி 8 ஆண்டுகளில் தான் இந்த வெற்றிகளைப் பெற்றுள்ளது.

கேப்டன் ரோகித்துடன் ஹர்திக், பொல்லார்டு, சூர்யகுமார், டிகாக், க்ருணால், இஷான் கிஷன், பும்ரா, போல்ட், கோல்டர் நைல், கிறிஸ் லின், சாவ்லா, நீஷம் என நட்சத்திர ஆட்டக்காரர்கள் அணிவகுப்பதால் எம்ஐ உற்சாகமாக களமிறங்குகிறது.
நட்சத்திர பட்டியலுக்கு பெங்களூர் அணியும் சளைத்ததில்லை. கேப்டன் கோஹ்லியுடன் டிவில்லியர்ஸ், கேன் ரிச்சர்ட்சன், மேக்ஸ்வெல், கைல் ஜேமிசன், டேனியல் சாம்ஸ், பின் ஆலன், ஆடம் ஸம்பா ஆகியோருடன் இந்திய வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், சாஹல், தேவ்தத் படிக்கல், சிராஜ், சைனி ஆகியோரும் உள்ளனர்.  ஆர்சிபி 2009, 2011, 2016ல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தாலும், இதுவரை கோப்பையை கைப்பற்ற முடியாமல் தவித்து வருகிறது. அதே சமயம் மும்பை அணி 6 முறை பைனலுக்குள் நுழைந்து 5 முறை பட்டம் வென்று அசத்தியுள்ளது.  தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் முனைப்பு காட்டுவதால், இன்றைய போட்டியில் வேகத்திற்கும், பரபரப்பிற்கும் பஞ்சமிருக்காது.

Tags : Mumbai ,Bangalore ,IPL festival ,Chennai , IPL Festival, Chennai, Mumbai - Bangalore, clash
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 526 புள்ளிகள் உயர்வு..!!