×

லாரி மோதி விபத்து அரசு பஸ் கவிழ்ந்து 3 பேர் பரிதாப பலி: 20 பயணிகள் படுகாயம்

சிதம்பரம்: கடலூர் அருகே லாரி மோதிய விபத்தில் அரசு விரைவு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து டிரைவர் உள்பட 3 பேர் பலியானார்கள். மேலும் 20 பயணிகள் படுகாயம் அடைந்தனர். நாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு பேருந்து ஒன்று நேற்று இரவு புறப்பட்டது. இந்த பேருந்தை நாகையை சேர்ந்த டிரைவர் சிவக்குமார் (42) ஓட்டிச் சென்றார். இன்று அதிகாலை சிதம்பரம் - கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுப்பாளையம் என்ற இடத்தின் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது. மேட்டுப்பாளையம் கிராமத்தின் வளைவில் திரும்பும் போது எதிரே கடலூரிலிருந்து மீன் ஏற்றிக்கொண்டு அதிகவேகத்தில் வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக பேருந்து மீது மோதியது.

இதில் அரசு பேருந்து நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அரசு விரைவு பேருந்து டிரைவர் சிவக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். 20 பயணிகள் படுகாயம் அடைந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பயணிகள் தரங்கம்பாடி அன்பரசன் (40), நாகப்பட்டினம் வைரவன் (20) ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் படுகாயமடைந்த 16 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். 4 பேர் சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் லாரி மோதிய விபத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து டிரைவர் உள்பட 3 பேர் பலியான சம்பவம் பரங்கிப்பேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Parthaba , Government bus overturns in truck collision, 3 killed, 20 passengers injured
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த...