×

ஆனைமலை அருகே தமிழக எல்லையில் கேரள கழிவுகளை கொட்ட வந்த 3 டிப்பர் லாரிகள் சிறைபிடிப்பு

ஆனைமலை: ஆனைமலை அருகே தமிழக-கேரள எல்லைப் பகுதியில் கேரள கழிவுகளை கொட்ட வந்த 3 டிப்பர் லாரிகளை விவசாயிகள் சிறைபிடித்து வருவாய்த்துறையிடம் ஒப்படைத்தனர். தமிழக-கேரள எல்லைப் பகுதியான பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில், கேரள  மாநிலத்திலிருந்து மருத்துவ கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் உள்ளிட்ட கழிவுகள் கொட்டுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள தமிழக கேரள எல்லைப் பகுதியான செமனாம்பதி கிராமத்தில் இரட்டை மடை என்ற பகுதியில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆண்டனி ஜோஸ் என்பவரது தோட்டத்தில், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் இருந்து ஏராளமான கழிவுகள் கொண்டுவந்து கொட்டுவதாக விவசாயிகளுக்கு தகவல் கிடைத்தது.

இன்று அதிகாலை நேரத்தில் 3 டிப்பர் லாரிகளில் கொண்டுவரப்பட்ட கழிவுகளை, பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டி மர்ம நபர்கள் கொட்டி வந்தனர். அப்போது அங்கு சென்ற விவசாயிகள் லாரிகளை சிறைபிடித்து விசாரித்த போது மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதை அடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை ஆய்வு செய்தனர், கழிவுகள் கொண்டு வந்த லாரியில் கேரளா மாநில அரசு பணிக்காக இயக்கும் வாகனம் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து லாரிகளை கைப்பற்றிய அதிகாரிகள் கேரள மாநிலத்தைச் சேர்ந்த தோட்டத்து உரிமையாளர் ஆண்டனி ஜோசை தேடிவருகின்றனர்.

 தமிழக-கேரள எல்லை வழியாக கேரளாவிலிருந்து அடிக்கடி இது போன்ற கழிவுகளை கொண்டு வந்து விவசாய நிலங்களில் கொட்டி வருவதால், நிலத்தடி நீர் மாசுபட்டு கால்நடைகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். கேரள எல்லைப் பகுதியில் உள்ள காவல்துறை சோதனை சாவடிகளில் முறையான கண்காணிப்பு பணி நடைபெறுவதில்லை. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kerala ,TN border ,Animalai , Who came to dump Kerala waste at the Tamil Nadu border near Anaimalai Capture of 3 tipper trucks
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...