×

கோடை தொடங்கும் முன் பல இடங்களில் மறியல்: நிதியின்றி பரிதவிக்கும் ஊராட்சி செயலாளர்கள்; ‘குடிநீர் வசதிகூட செய்ய முடியவில்லை’ என புலம்பல்

வேலூர்: தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஊராட்சி பகுதிகளில் மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் நடக்காத மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் தனி அதிகாரிகளால் நிர்வாகம் செய்யப்படுகிறது. ஆனாலும் உள்ளாட்சிகளின் நிர்வாகம் முழுமையாக செயல்பட முடியவில்லை.  கிராம ஊராட்சிகளில் பணியாளர்களுக்கு சம்பளம், குடிநீர் வினியோகம், தெருவிளக்கு, சுகாதார பணிகள், மின்கட்டணம் போன்ற குறிப்பிட்ட பணிகள் மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், இதற்கான நிதி பஞ்சாயத்து நிதிக்குழு 1ன் கீழ் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.  

ஏற்கனவே பெரும்பாலான ஊழியர்களுக்கு சம்பள பாக்கி நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தற்போது தனி அலுவலர், மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்ட பின்னரும் ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்குவதில் தொடர் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளதால் நிதிகூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.   குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை பணிகள் நிறைவேற்றியதற்கு ஊராட்சி செயலர்கள் பில்பாஸ் செய்ய அதிகாரிகளிடம் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எந்த அடிப்படை வசதிகள் கூட செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையிலும் எந்த ஒரு சிறப்பு நிதியும் வழங்கப்படவில்லை. தமிழக அரசு மாதந்தோறும் வழங்கும் பொதுநிதியும் அதிகரிக்கப்படவில்லை.

இதனால் நிதியின்றி ஊராட்சி செயலாளர்கள் தவித்து வருகின்றனர். மேலும் பல இடங்களில் குடிநீர் கேட்டு சாலை மறியல், முற்றுகை போராட்டம் அரங்கேறி வருகிறது. இதுகுறித்து ஊராட்சி செயலர்கள் கூறியதாவது: ஊராட்சிகளுக்கு போதிய நிதி ஒதுக்குவதில்லை. ஊராட்சிகளில் குடிநீர் குழாய் சரி பார்ப்பு, சாக்கடை அடைப்பு நீக்கம், குடிநீர் தொட்டி சுத்தம் செய்தல் போன்ற அடிப்படை பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் வாங்கிய மற்றும் பராமரிப்பு பணிகளை கூட செய்ய முடியவில்லை. தற்போது கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் குடிநீர் பிரச்னை சில இடங்களில் ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாக நிவர்த்தி செய்ய முடியவில்லை. நாங்கள் கடன் வாங்கி பணிகளை செய்து விட்டாலும், அந்த தொகையை அதிகாரிகளிடம் பெறுவதற்கு நாங்கள் பெரும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. எங்களது சொந்த பணத்தை செலவிட்டாலும் அந்த தொகை உடனடியாக திரும்ப கிடைப்பது இல்லை.

ஏற்கனவே பல மாதங்களாக பம்ப் ஆபரேட்டர்களுக்கு சம்பளம் பாக்கியுள்ள நிலையில் ஊராட்சியின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியாமலும், நிறைவேற்றப்பட்டதற்கு உரிய தொகையை பெற முடியாமலும் தவித்து வருகிறோம். கோடைக்காலம் தற்போது தொடங்கி இருக்கிறது. ஆனால் மாதம்தோறும் வழங்கப்படும் பொதுநிதி அதே தொகை தான் வழங்கப்படுகிறது. இதில் ஒரு சில இடங்களில் மின்சார பில்லுக்கு பிடித்தும் செய்து கொள்கின்றனர். எனவே தமிழக ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் போதுமான நிதியை ஒதுக்கீடு செய்தும், பொதுமக்களின் அடிப்படை பணிகளை மேற்கொள்ளும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.

Tags : Stir in several places before summer begins: Panchayat secretaries languishing without funds; Lamenting that ‘even the drinking water facility could not be made’
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் மயங்கி விழுந்து 2 பேர் பலி: சேலத்தில் சோகம்