அரசின் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு: சட்டீஸ்கரில் கடத்தப்பட்ட சிஆர்பிஎப் வீரர் ராகேஷ்வர் சிங்கை நக்சல்கள் விடுதலை செய்தனர்.!!!

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் என்கவுண்டரின்போது கடத்தப்பட்ட பாதுகாப்பு படை வீரரை நக்சலைட்டுகள் விடுதலை செய்தனர். சட்டீஸ்கர் மாநிலம், சுக்மா- பிஜப்பூர் மாவட்ட எல்லைக்கு இடையே உள்ள காட்டுப் பகுதியில் நக்சல்கள் நடமாட்டம்  அதிகம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, மாநில போலீசார், துணை ராணுவ படையினர், கோப்ரா சிறப்பு படையினர், மாவட்ட ரிசர்வ் போலீசார் என 1,500 வீரர்கள், கடந்த ஏப்ரல் 2-ம் தேதி இரவு அந்த காட்டுப்பகுதியை  சுற்றி வளைத்தனர். பல்வேறு பிரிவுகளாக பிரிந்து, நக்சல்களை தேடினர்.

அப்போது, ஜோனகுண்டா கிராமத்தில் உள்ள காட்டில் பதுங்கி இருந்த நக்சல்களை பாதுகாப்பு படையினர் நெருங்கினர். இதனால், வீரர்கள் மீது நக்சல்கள் திடீரென இயந்திர துப்பாக்கிகளால் சுட்டனர். காட்டின் மேல் பகுதிகளில் இருந்து 400க்கும்  மேற்பட்ட நக்சல்கள், வீரர்களை மூன்று பக்கத்தில் இருந்தும் சுற்றி வளைத்து சுட்டனர். வெடிகுண்டுகளையும் வீசி தாக்கினர். திடீர் தாக்குதலால் வீரர்கள் சிறிது நிலை குலைந்த பிறகு, நக்சல்களுக்கு கடும் பதிலடி கொடுத்தனர். அதை தாக்குப்  பிடிக்க முடியாமல் நக்சல்கள் தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலுக்குப் பிறகு அங்கு வீரமரணம் அடைந்து விழுந்திருந்த 5 வீரர்களின் சடலங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், 30க்கும் மேற்பட்ட வீரர்கள் குண்டு பாய்ந்து காயமடைந்தனர். அவர்கள்  மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

பின்னர் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 18 வீரர்களை காணவில்லை என்பது தெரிய வந்தது. உடனே, சண்டை நடந்த காட்டுப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு துப்பாக்கி குண்டு பாய்ந்து  இறந்த நிலையில் 17 வீரர்களின் சடலங்கள் மீட்கப்பட்டது. இதன் மூலம், நக்சல்களின் காட்டுமிராண்டிதனமான தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது.

இதற்கிடையே, நக்சல்களுடனான தாக்குதலின்போது சிஆர்பிஎப் ஆய்வாளர் ராகேஷ்வர் சிங் மன்ஹஸ் என்பவர் காணவில்லை. அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஆனால், சிஆர்பிஎப் வீரர் ராகேஷ்வர் சிங் மன்ஹஸ்  தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவித்து ராகேஷ்வர் சிங் புகைப்படத்தை நக்சலைட்டுகள் வெளியிட்டனர். மேலும், ராகேஷ்வர் சிங்கை விடுக்க தயாராக இருப்பதாகவும், பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு மத்தியஸ்தரை நியமிக்க  வேண்டும் என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து, நக்சலைட் கட்டுப்பாட்டில் இருந்த சிஆர்பிஎப் வீரரை மீட்க சட்டீஸ்கர் மாநில அரசு 2 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழுவை நியமித்தது. இந்த குழு நக்சலைட்டுகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதில்,  நக்சலைட்டுகளுக்கு உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, ராகேஷ்வர் சிங் மன்ஹஸை இன்று விடுவித்தனர். தொடர்ந்து, அவர் பிஜாப்பூருக்கு அழைத்து வரப்பட்டார். பாதுகாப்பு படை வீரர் ராகேஷ்வர் விடுதலை செய்யப்பட்டதையடுத்து ஜம்முவில் உள்ள அவரது குடும்ப உறுப்பினர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இது தொடர்பாக பிஜாப்பூர் எஸ்.பி. கூறுகையில், நாங்கள் அவரை பாதுகாப்பாக திரும்ப அழைத்து வந்துள்ளோம். அவர் இங்கே ஒரு மருத்துவரால் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார் என்று தெரிவித்தார்.

Related Stories:

>