வேகம் எடுக்கும் கொரோனா பரவல்: தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை.!!!

புதுடெல்லி: கொரோனா பரவல் தடுப்பு, தடுப்பூசி போடுதல் குறித்து பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் தமிழகத்தின் சார்பில் தலைமைச் செயலாளர் ராஜீவ்ரஞ்சன் பங்கேற்றுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே பரவிய கொரோனா முதல் அலை ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இரண்டாவது அலையானது ஒரு நாள் பாதிப்பில் 1  லட்சத்துக்கு மேல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், முதல் அலையின் போது ஒரு நாள் பாதிப்பானது 10 ஆயிரத்துக்கு கீழே கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் இப்போது தினசரி பாதிப்பு 1 லட்சத்தை தாண்டி வேகமெடுத்துள்ளது. அந்த  வகையில் நேற்று 1.15 லட்சம் பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மக்களிடையே மீண்டும் அச்சம் நிலவி வருகிறது.

குறிப்பாக மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்கள், டெல்லி யூனியன் பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து சில மாநிலங்களின் முக்கிய  நகரங்களில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் பணியும் ஒருபுறம் நடைபெற்று வருகிறது. இருந்தும் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமெடுத்து வருவதால்,  தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் மாநில அரசுகள் திணறி வருகின்றன.

இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், தடுப்பூசி போடுவது குறித்தும் பிரதமர் மோடி, கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சரவை செயலர், பிரதமரின் முதன்மை செயலர், சுகாதார செயலர் உள்ளிட்ட முக்கிய  அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதேபோல் கடந்த 6ம் தேதியன்று 11 மாநிலங்கள் மற்றும் யூனியன்  பிரதேசங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்  ஹர்ஷ வர்தன் ஆலோசனை  நடத்தினார். அதன் தொடர்ச்சியாக தற்போது அனைத்து மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்து வருகிறார். இதில் தமிழகத்தின் சார்பில் தலைமைச் செயலாளர் ராஜீவ்ரஞ்சன் பங்கேற்றுள்ளார்.

அப்போது, கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் அவர்களின் சொந்த ஊருக்கு திரும்புவதால் ஏற்படும் அசாதாரண சூழலை  தடுத்தல் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories:

>