அமராவதி அணையில் போதுமான நீர் இருப்பு: சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள்..!

உடுமலை: உடுமலை அருகே அமைந்துள்ளது 90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதி அணை. திருப்பூர், கரூர் மாவட்டத்தை உள்ளடக்கிய சுமார் 54 ஆயிரத்து 637 ஏக்கர் விளைநிலம் இந்த அணை மூலம் பாசனவசதி பெற்று வருகிறது. மேலும் அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் நூற்றுக்கணக்கான வழியோர கிராம மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு உரிய காலத்தில் பெய்த பருவமழை காரணமாக அமராவதி அணையானது 3 முறை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தது. தொடர்ந்து இந்த ஆண்டு துவக்கத்திலும் ஒரு முறை நிரம்பியது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதியில் அணை நிரம்பியது. 88 அடி நிரம்பிய போதே அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த உபரி நீர் அணைத்தும் 9 கண் மதகு வழியாக ஆற்றிலும், பிரதான கால்வாயிலும் திறந்து விடப்பட்டது.

இதையடுத்து பழைய மற்றும் புதிய பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் அணையின் நீர்மட்டம் மள மளவென சரிய துவங்கியது. இந்நிலையில் நவம்பர், டிசம்பரில் பெய்த பருவமழையால் அணையின் நீர்மட்டம் டிசம்பரில் கிடு கிடுவென உயர்ந்து முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகளின் நிர்வாக திறமையால் அணைக்கு வரும் உபரிநீரை மட்டும் பாசனத்திற்கு திறந்துவிட்டு அணையின் நீர்மட்டத்தை சரிந்து விடாமல் ஒரே அளவாக நீடிக்கும்படி பார்த்து கொண்டனர். அமராவதி அணையின் நீரை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு, நெல் பயிரிடப்பட்டிருந்த விவசாயிகள் இந்த ஆண்டு உயிர் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை விடாதபடி அவ்வப்போது தண்ணீரை திறந்து விடப்பட்டது. மற்றப்படி தென்னை, சோளம் மற்றும் காய்கறி பயிரிட்டிருந்த விவசாயிகளுக்கும் குறைந்த அளவு தண்ணீர் வழங்கி, பயிர்களை காயவிடாத படி பார்த்து கொண்டனர். தற்போது கோடை காலம் துவங்கிய நிலையிலும், அணையில் 86 அடி நீர்மட்டம் இருக்கும்படி பொதுப்பணித்துறை பார்த்து கொண்டது. இதன்படி ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களுக்கும் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது.

மேலும் தொடர்ந்து அணையின் கொள்ளளவு குறையாத நிலையில் ஜூன் மாதம் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது. இதன்படி இந்த ஆண்டு அமராவதி அணையை நம்பியுள்ள விளைநிலங்களில் இரு போக சாகுபடி செய்ய முடியும். இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர். குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்ற நம்பிக்கையில் பொதுமக்களும் நிம்மதி அடைந்துள்ளனர். குறிப்பாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக அணையின் நீர்மட்டம் 86 அடிக்கு குறையவே இல்லை என்பது ஒரு சாதனையாகவே பார்க்கப்படுகிறது. நேற்று மாலை நிலவரப்படி அமராவதி அணையின் நீர்மட்டம் 86.75 அடியாக உள்ளது. 24 கன அடி நீர்வரத்து உள்ளது. வெளியேற்றமும் 24 கன அடியாக உள்ளது. கோடை துவங்கிய நிலையில் மழைப்பொழிவு எதுவும் இல்லாத நிலையில் நீர்பிடிப்பு பகுதிகள் வறண்டு காணப்படுகிறது. ஆனாலும் அணையின் நீர்மட்டம் 86 அடியாக நீடிக்கிறது.

Related Stories:

>