×

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இளநீர் பருக வேண்டும்: டாக்டர் அட்வைஸ்

பழநி: ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இளநீர் பருக வேண்டுமென பழநி சித்த மருத்துவர் மகேந்திரன் ஆலோசனை வழங்கி உள்ளார். கோடை காலம் துவங்கி விட்டதால் பகல் நேரங்களில் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு வெயில் கொளுத்த துவங்கி உள்ளது. இதனால் வெப்பத்தால் உடல் உஷ்ணமடைந்து பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. கோடையின் சூட்டை தணிக்க மக்கள் குளிர்பானங்களை அதிகளவு உட்கொள்கின்றனர். இது மேலும் உடலை நோய்வாய்ப்படுத்துகிறது. ஏசி அறையில் இருந்தாலும் உடல் உஷ்ணமடையும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் கோடை வெயிலில் தப்பிக்கவும், உடல் சூட்டை குறைக்கவும் இளநீர் சரியான தேர்வு என பல மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து பழநி அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவர் டாக்டர்.மகேந்திரனிடம் கேட்டபோது கூறியதாவது, இளநீர் உடல் சூட்டை தணிப்பதற்கு ஏற்ற பானமாகும்.

இதில் புரதம், கொழுப்பு, பொட்டாசியம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், ஆற்றல் (கலோரி), கால்சியம், இரும்புச்சத்து, தயமின், ரிபோபிளேவின், நியாசின் போன்றவை உள்ளன. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இளநீர் சரியான தேர்வாகும். இளநீரில் உள்ள பொட்டாசியம், எலக்ட்ரோலைட் குறைபாட்டை நீக்கி வயிற்றுபோக்கினை சரிசெய்ய உதவுகிறது. இதில் உள்ள எதிர்ப்பு சக்தி வைரஸ் நோய் தாக்குதலுக்கு நல்ல மருந்தாக அமைகிறது. உடல் உஷ்ணத்தை குறைக்கிறது. உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. கோடைக்கு ஏற்ற சத்தான பானம். வாதத்தை கட்டுப்படுத்துகிறது. சிறுநீரக கற்கள் உருவாவதை  கட்டுப்படுத்துகிறது. ரத்தத்தில் கொழுப்பு அளவை குறைக்கிறது. சருமத்தை பொலிவாக்க உதவுகிறது. இரத்தசோகை, உற்சாகமின்மைக்கு நிவாரணம் அளிக்கிறது. ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. இருமல் நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Dr. , Young people should drink water to control blood pressure: Dr. Advice
× RELATED தொப்பையால் உருவாகும் நோய்கள்!