ஓசூரில் அடுக்குமாடி குடியிருப்புக்கான பூமி பூஜையின் போது விபரீதம்!: பந்தல் அமைக்கும் பணியில் 4 தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!!

கர்நாடகா: ஓசூர் அருகே மின்சாரம் தாக்கி 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெறவிருந்தது. இதற்காக கட்டுமான பகுதியின் அருகிலேயே பந்தல் அமைக்கும் பணியானது நடைபெற்றிருந்தது. இதில் சுமார் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து பந்தல் அமைக்க பள்ளம் தோண்டியபோது, பந்தல் அருகே சுற்றுச்சுவரை ஒட்டியவாறு மின்கம்பம் இருந்துள்ளது. இதனை கவனத்தில் கொள்ளாத தொழிலாளர்கள் இரும்பு பைப்பினை உபயோகித்துள்ளனர். இதன் காரணமாக இரும்பு பைப் மின்கம்பத்தின் மீது மோதி திடீரென மின்சாரம் பாய்ந்துள்ளது.

இந்த விபத்தில் சிக்கி தொழிலாளர்கள் ஆகாஷ் (30), மகாதேவ் (35), விசாகாந்தா (35), விஜய் (30) உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் உடனடியாக அத்திப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து அத்திப்பள்ளி போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பு கட்ட கட்டுமான பணியின் பூமி பூஜையின் போது 4 தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories:

>