×

அமைச்சர் விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதி வாக்குப் பெட்டியில் பயன்படுத்தும் டேக் வெளியே கிடந்ததால் பரபரப்பு

* இயந்திரம் மாற்றப்பட்டதா?
* திமுக, அமமுகவினர் புகார்

புதுக்கோட்டை: அமைச்சர் விஜயபாஸ்கர் தொகுதியில் வாக்குப்பெட்டியில் பயன்படுத்தும் டேக் வெளியே கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இயந்திரம் மாற்றப்பட்டதா என்ற சந்தேகத்தில் திமுக, அமமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை , அறந்தாங்கி, விராலிமலை, திருமயம், ஆலங்குடி, கந்தர்வகோட்டை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த 1,902 வாக்குச்சாவடிகளிலும் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக நேற்றுமுன்தினம் இரவு வாக்கு எண்ணும் மையமான புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டன. இந்நிலையில் நேற்று காலை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உமாமகேஸ்வரி தலைமையில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகள் ஒவ்வொன்றாக சீல் வைக்கப்பட்டன.

அப்போது, அமைச்சர் சி.விஜயபாஸ்கர் போட்டியிடும் விராலிமலை தொகுதிக்குட்பட்ட மாத்தூர் பகுதியில் உள்ள 27வது வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட முகவர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கையெழுத்துகளுடன் கூடிய டேக் ஒன்று வாக்கு எண்ணும் மையத்தில் கிடந்துள்ளது. இதனை கண்ட முகவர்கள், உடனே தேர்தல் நடத்தும் அலுவலருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றப்பட்டிக்கலாம் என சந்தேகமடைந்து  புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் உமாமகேஸ்வரியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: விராலிமலை சட்டமன்ற தொகுதிக்குட்ட வாக்குப்பெட்டியில் இருந்த டேக் எப்படி வெளியே வரமுடியும். இது எப்படி நடந்தது என்று உடனே கண்டுபிடிக்க வேண்டும். விராலிமலை தேர்தல் நடத்தும் அலுவலர் பாலதண்டாயுதபாணி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் இவர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் அவரை வைத்துக்கொண்டு வாக்கு எண்ணிக்கையை நடத்தக்கூடாது. வேறு அதிகாரியை கொண்டு வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக முகவர்கள் முன் அனைத்து வாக்கு பெட்டிகளையும் ஆய்வு செய்த பிறகு வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு அதிகாரிகள், வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்பு வாக்குச்சாவடியில் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். அப்போது, விவிபேட் கருவியில் இருந்து சேகரிக்கப்படும் வாக்கு சீட்டுகளை ஒரு கவருக்குள் வைத்து, அதன் மீது முகவர்கள் கையெழுத்துகளுடன் கூடிய டேக் சுற்றப்பட்டு சீல் வைக்கப்படும். அந்த டேக் சீல்தான் தவறுதலாக இங்கு கிடந்துள்ளது. இதற்கும், வாக்குப்பதிவு இயந்திரத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என விளக்கம் அளித்தனர். எனினும், இந்த விளக்கத்தை திமுக, அமமுக கட்சியினர் ஏற்க மறுத்தனர்.

இதையடுத்து, மாவட்ட தேர்தல் பார்வையாளர் ரகு உத்தரவின்பேரில் புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உமா மகேஸ்வரி தலைமையில் வாக்கு எண்ணும் மையத்தில் விராலிமலை தொகுதிக்கான பாதுகாப்பு அறையின் சீல் அகற்றப்பட்டு, அங்கிருந்த 27வது வாக்குச்சாவடிக்கான வாக்குப்பதிவு இயந்திரம் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, அந்த வாக்குப்பதிவு இயந்திரத்தில் சீல் பிரிக்காமல் இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஆட்சேபனை தெரிவித்து வந்தோர் சமாதானம் அடைந்தனர்.
டேக் வெளியில் கிடந்தது தொடர்பாக தேர்தல் ஆணையர்களுடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உமா மகேஸ்வரி தெரிவித்தார்.

Tags : Minister ,Vijayabaskar , Minister Vijayabaskar's Viralimalai constituency is in turmoil as the tag used in the ballot box is lying outside
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்