×

ஏகப்பட்ட குளறுபடியால் மக்களின் நம்பகத்தன்மையை இழந்து விட்டது? தேர்தல் நடத்தியதில் தோல்வியை சந்தித்த தேர்தல் ஆணையம்: விடியவிடிய நடந்த பணப்பட்டுவாடா

* ஓட்டு மிஷினை தூக்கி சென்ற அவலம்
* 75 சதவீதம் பூத் சிலிப் வழங்கவில்லை

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் அதிகாரிகளின் அலட்சியப் போக்காமல் நடந்த குளறுபடிகளால் தேர்தல் ஆணையம் ஒட்டுமொத்த தோல்வியை சந்தித்து விட்டதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மக்களின் நம்பகத்தன்மையை தேர்தல் ஆணையம் இழந்து விட்டதா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.   தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கான சட்டப் பேரவை தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்காக கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சியினர் அனைவரும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் தமிழக வரலாற்றில் நடைபெறாத சம்பவமாக பீகார் போன்ற வடமாநிலங்களில் நடைபெற்றதை போன்று வேளச்சேரி தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பைக்கில் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 மாற்று இயந்திரத்தை தான் தேர்தல் பணியாளர்கள் கொண்டு சென்றனர் என்றும், பைக்கில் கொண்டு சென்றது தான் தவறு என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. ஆனால் அந்த வாக்குப்பதிவு இயந்திரத்தில் 17 ஓட்டுகள் பதிவாகி இருந்ததாக தகவல் கசிந்து வருவது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.  என்ன தான் மாற்று வாக்குப்பதிவு இயந்திரம் என்றாலும், அதுவும் ஒரு மோட்டார் பைக்கில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் சாதாரணமாக கொண்டு சென்றது ஏன்?. அந்த வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளை கொண்டு அந்த இயந்திரத்தில் ஒரு தரப்புக்கு ஆதரவாக வாக்குகளை பதிவு செய்து வைத்தால் நிலமை என்னவாக இருக்கும்? பைக்கில் வைத்து கொண்டு செல்லும் அளவுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்திருப்பதால் இதுபோன்ற தில்லு முல்லு பணிகளை சம்பந்தப்பட்ட ஊழியர்களால் செய்ய முடியாதா என்ன என்பது போன்ற கேள்விகள் தேர்தல் ஆணையத்தை நோக்கி எழுந்துள்ளது.

  கண்டுபிடித்ததால் தான் அவர்கள் சிக்கினர். இதுபோன்று தமிழகம் முழுவதும் எத்தனை வாக்குசாவடிகளில் இப்படி நடந்திருக்குமோ என்ற சந்தேகமும் வாக்காளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. துறைமுகம் தொகுதியிலும் இதுபோன்ற முயற்சிகள் நடந்த போது அதை அங்கிருந்த திமுகவினர் தடுத்ததால் தடுக்கப்பட்டது என்ற தகவலும் ெவளியாகியுள்ளது.   இந்த விவகாரம் பெரிய அளவில் தேர்தல் ஆணையத்துக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயரை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அடுத்ததாக பார்த்தால், தேர்தல் நடவடிக்கை குறித்த அனைத்து தகவல்களை இணையதளத்தில் தேர்தல் ஆணையம் கொடுத்துள்ளது. வழக்கமாக தேர்தல் நேரத்தில் வாக்காளர்கள் எந்த வாக்குச்சாவடி மையத்தில், அதற்கான சீரியல் நம்பருடன், எந்த பாகத்துக்கு அமைக்கப்பட்ட பகுதியில் வாக்களிக்க வேண்டும் என்ற தகவல்கள் கொண்ட பூத் சிலிப்பை வீடு வீடாக தேர்தல் ஆணையம் வழங்கும். கடந்த சட்டப்பேரவை தேர்தலில், ராஜேஷ் லகானி தேர்தல் அதிகாரியாக பணியாற்றியபோது, பூத் சிலிப் முழுமையாக வழங்கப்பட்டது.

இந்த தேர்தலில் 70 சதவீத அளவுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியை தேர்தல் ஆணையம் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை பொதுமக்கள் முன் வைத்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் ஆணையம் அதிகப்படுத்தியது. இதனால் கடந்த தேர்தலில் ஓட்டு போட்ட வாக்குச்சாவடி மையங்கள் அல்லாமல் புது புது வாக்குச்சாவடிகளுக்கு செல்ல வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டது. பெற்றோர்களுக்கு ஒரு வாக்குச்சாவடியிலும், பிள்ளைகளுக்கு வேறு வாக்குச்சாவடியிலும் வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்படி என்றால் பூத் சிலிப் முறைப்படி வழங்கியிருந்தால் அவர்கள் வாக்களிக்க ஏதுவாக இருந்திருக்கும். அதை தேர்தல் ஆணையம் முறைப்படி செய்யாததால் பலர் எந்த வாக்குச்சாவடி மையத்துக்கு செல்ல வேண்டும் என்ற குழப்பத்துக்கு ஆளாகினர்.   

பலர் பூத் சிலிப் இல்லாமல் வாக்குச்சாவடிகளுக்கு சென்று பெரும் அலைக்கழிப்புக்கு ஆளாகினர். ஒரு கட்டத்தில் ஓட்டு போடவே வேண்டாம் என்று வீடுகளுக்கு திரும்பியவர்களின் எண்ணிக்கையோ ஏராளம் என்கிறார்கள். அதற்கு மாறாக தேர்தல் ஆணைய இணையதளத்தில் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை தட்டினால் பூத் சிலிப் பெற்றுக் கொள்ளலாம். அதை பிரிண்ட் அவுட் எடுக்கலாம். அல்லது செல்போனில் டவுன் லோடு செய்யலாம்.  இதுபற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் தேர்தல் ஆணையம் செய்யவில்லை. அதற்கான நடவடிக்கைளை தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை. இதனால், பலருக்கு பூத் சிலிப் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகினர். அவர்களின் வாக்குகள் எல்லாம் வீணாகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். இவை எல்லாம் தேர்தல் ஆணையத்தின் அலட்சிய போக்கால் தான் நடந்தது என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் கொழுந்து விட்டு எரிந்ததை பார்க்க முடிந்தது.

அடுத்ததாக, நகர்புறங்கள் தவிர்த்து மற்ற வாக்குச்சாவடி மையங்களில் வெளியில் கையுறை வழங்கப்படவில்லை. சானிடைசர் பெயரளவுக்கு வழங்கிவிட்டு அதற்கு பின் அப்படி ஒன்று வழங்கப்பட்டதா என்ற அளவுக்கு யாருக்கும் கிடைக்கவில்லை.  உடல் வெப்ப பரிசோதனை செய்யக்கூடிய தெர்மல் ஸ்கேனர் கருவிகள் பல வாக்குச்சாவடி மையங்களில் சரியாக வேலை செய்யவில்லை என்றும் மக்கள் புகார் தெரிவித்தனர். இவற்றை தேர்தல் ஆணையம் முறையாக கண்காணிக்கவில்லை. அதற்கு காரணம் தேர்தல் அதிகாரிகளின் அலட்சியப் போக்கு தான் காரணம் என்கிறார்கள். இவற்றை எல்லாம் விட தேர்தல் ஆணையத்தின் மீது தீராத களங்கம் ஏற்படும் வகையில் ஆளுங்கட்சியினர் அராஜக நடவடிக்கைளை தேர்தல் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அவர்களுக்கு துணை போனது சட்ட ஒழுங்கு பிரச்னைக்கு பாதை ஏற்படுத்தி கொடுப்பதாக இருந்ததாக மற்ற அரசியல் கட்சிகள் புகார் செய்துள்ளது.  

  அதிமுகவினருக்கு தேர்தல் அதிகாரிகள் துணை போனதும், அவர்களின் விதிமீறல்களை கண்டு கொள்ளாமல் விட்டது போன்ற தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.   கடந்த ஒரு வாரமாக ஆளுங்கட்சியான அதிமுகவினர் விடியவிடிய வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தனர். எங்கு பார்த்தாலும் அதிமுக தரப்பில் இருந்து கட்டு கட்டாக பணத்துடன் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு பணம் வழங்கினர். அதை திமுகவினர் தடுத்த போது அவர்கள் மீது கொலை வெறி தாக்குதலும் நடத்தப்பட்டது. அதை கண்டித்து பல இடங்களில் சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.  தமிழகம் முழுவதும் அதிமுகவினர் நடத்திய பணப்பட்டுவாடா வேட்டையை தடுக்காமல்  தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்தது பொதுமக்கள் மத்தியில் தேர்தல் ஆணையம் என்ற ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதுஒருபுறம் இருக்க பல இடங்களில் பணப்பட்டுவாடா செய்த அதிமுகவினரை திமுக கூட்டணி கட்சியினர் கையும் களவுமாக பிடித்து கொடுத்தும் உள்ளூர் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற புகார்களும் தேர்தல் ஆணையத்தில் புகார்கள் குவிந்துள்ளது.   ஆனால் அதன் மீது ஆணையம் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் அப்படியே காற்றில் பறக்கவிட்ட சம்பவங்கள் தேர்தல் ஆணையத்தின் மீது மக்களுக்கு இருந்த நம்பகத்தன்மை இழந்து விட்டது என்ற கேள்வியை மக்கள் எழுப்பி வருகின்றனர்.
இப்படிப்பட்ட தேர்தல் ஆணையத்தை நம்பி இன்னும் 23 நாட்கள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எப்படி பாதுகாப்பாக இருக்குமோ என்ற அச்சத்தில் அரசியல் கட்சிகள் உள்ளது. தேர்தலை ஒழுங்காக நடத்த முடியாத தேர்தல் ஆணையம் எப்படி வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்கும் என்ற பதற்றத்தில் அரசியல் கட்சியினர் உள்ளனர்.  இப்படி எல்லா நடவடிக்கையிலும் தேர்தல் ஆணையம் ஒட்டுமொத்த தோல்வியை சந்தித்துள்ளது என்ற கருத்து நடுநிலையாளர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் ஹாட் டாப்பிக்காக உள்ளது.


Tags : Election Commission ,Vidyavidiya , Has it lost the credibility of the people due to the accumulated mess? Election Commission fails to hold elections
× RELATED வாக்குச்சாவடி மையத்தின் அருகில்...