திருவண்ணாமலையில் அதிகாலை பரபரப்பு: வாக்களிக்க சொந்த ஊர் வந்தவர்கள் திரும்பி செல்ல பஸ் வசதியின்றி மறியல்

திருவண்ணாமலை: வாக்களித்துவிட்டு ஊர்திரும்ப பஸ் வசதியின்றி தவித்த பொதுமக்கள், திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் பட்டதாரிகள் சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக, கட்டுமான தொழில் உள்ளிட்டவைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் குடும்பம், குடும்பமாக பெருநகரங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக ஏராளமானோர் தங்களுடைய சொந்த கிராமங்களுக்கு வந்திருந்தனர். நேற்று முன்தினம் தங்களுடைய ஜனநாயக கடமையை முடித்துவிட்டு, மீண்டும் வேலைக்காக வெளியூர் திரும்புவதற்கு திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு பிறகு பஸ்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

குறிப்பாக, பெங்களூரு, சென்னை, கோவை, திருப்பூர் போன்ற நகரங்களுக்கு பஸ் கிடைக்கவில்லை. எனவே, பஸ் நிலையம் முழுவதும் கூட்டம் அலைமோதியது. போதுமான பஸ்களை தொடர்ச்சியாக இயக்க அதிகாரிகள் முயற்சிக்கவில்லை. எனவே, காத்திருந்து அதிருப்தி அடைந்த ெபாதுமக்கள், நேற்று அதிகாலை 2 மணியளவில் பஸ் நிலையத்தில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அதனால், பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, அங்கு விரைந்து வந்த போலீசார், சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், போக்குவரத்துக் கழக அதிகாரிகளுடன் பேசி, பஸ் வசதிக்கு ஏற்பாடு செய்தனர்.  அதைத்தொடர்ந்து, படிப்படியாக பஸ்கள் இயக்கப்பட்டு, கூட்டம் குறைய தொடங்கியது.

Related Stories:

>