×

தமிழகம் முழுவதும் போலி சான்றிதழ் கொடுத்து வனத்துறையில் சேர்ந்த ஊழியர்கள்: உயரதிகாரிகள் விசாரணை

சேலம்: தமிழகம் முழுவதும் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த வன ஊழியர்கள் குறித்து, உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக வனத்துறையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தோட்ட பணியாளர்களாக இருந்தவர்கள், மாவட்ட வாரியாக வனத்துறை ஊழியர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 8ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றிருந்தவர்களுக்கு அடுத்தடுத்து பதவி உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பலரும் படிப்பு சான்றுகளை கொடுத்திருந்தனர்.
இந்த வன ஊழியர்களில் சிலர், போலியாக படிப்பு சான்றிதழ் கொடுத்திருப்பது, சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னை தலைமை முதன்மை வன பாதுகாவலருக்கு சென்ற புகாரின் பேரில், அனைத்து மாவட்ட வனத்துறையிலும் வனக்காப்பாளர்களாக இருக்கும் நபர்களின் கல்விச் சான்றுகளை ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்பேரில், மாவட்ட வன அலுவலர்கள், 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் வனக்காப்பாளர்கள், வனவர்களின் படிப்பு சான்றுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில்  கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த கல்விச் சான்றிதழ்கள் ஆய்வில், 4 வன ஊழியர்கள் போலி சான்றிதழ்களை கொடுத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வன காப்பாளர்கள் கோபால், நிர்மலாதேவி, வனக்காவலர் பவுன்ராஜ், விலங்குகள் பாதுகாவலர் சகாயராஜ் ஆகிய 4 பேரையும் சஸ்பெண்ட் செய்து, மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவிட்டார். தொடர்ந்து அந்த 4 பேரின் மீதும், துறை ரீதியான மேல் விசாரணை நடந்து வருகிறது. இவர்களை போலவே, சேலம் மாவட்ட வனத்துறையில், இன்னும் 30 பேர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் இருப்பதாக கூறப்படுகிறது.  இதையடுத்து, அவர்கள் வழங்கிய சான்றிதழ்கள் குறித்த விசாரணையை உயர் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

 மற்ற மாவட்ட வனத்துறையிலும் இத்தகைய விசாரணையை வனத்துறை உயர் அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். மாநிலம் முழுவதும் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் நீடித்துள்ள பலரும் சிக்குவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘தோட்ட பணியாளர்களாக இருந்து வனக்காப்பாளர்களாக தேர்வானவர்கள், எழுத படிக்க தெரிந்திருந்தாலே போதுமானது. ஆனால், அடுத்தடுத்த பதவி உயர்வு கிடைக்கும் என்பதற்காக பலரும் கல்விச் சான்றிதழ்களை கொடுத்தனர். அதில், சிலரது சான்றுகள் போலியாக இருப்பது தெரியவந்துள்ளது. அதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் முடிவில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.



Tags : Tamil Nadu , Employees of the forest department giving fake certificates all over Tamil Nadu: High officials investigate
× RELATED வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே உள்ள...