தொண்டாமுத்தூர் வேட்பாளருக்கு மிரட்டல்-மறியல் அதிமுக-திமுகவினர் 200 பேர் மீது வழக்கு

கோவை: தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளருக்கு ெகாலை மிரட்டல் விடுத்த விவகாரம் மற்றும் சாலை மறியல் தொடர்பாக அதிமுக, திமுகவினர் உள்பட 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோவை செல்வபுரம் அரசு ஆரம்பப்பள்ளி ஓட்டுச்சாவடியை பார்வையிட தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி காரில் வந்தார். பள்ளி அருகே சென்றபோது அங்கே இருந்த அதிமுகவினர் சிலர் திமுக வேட்பாளருக்கு எதிராக கோஷமிட்டு வாக்குவாதம் செய்தனர். அவரை வரவிடாமல் தடுத்து மிரட்டி, கார் கண்ணாடி மீது தாக்குதல் நடத்தினர். வேட்பாளரையும் அவர்கள் தாக்க முயற்சி செய்தனர். அங்கேயிருந்த போலீசார் உடனடியாக செயல்பட்டு தாக்குதலை தடுத்தனர். வேட்பாளரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். அதிமுகவினரை கண்டித்து திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஹாலன் அளித்த புகாரின் பேரில் அடையாளம் காணக்கூடிய அதிமுக மற்றும் திமுகவைசேர்ந்த சுமார் 200 பேர் மீது செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவாகின. ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை.

Related Stories: