ஜாதி சொல்லி அவதூறு, விதிமுறை மீறல்: அமைச்சர்கள் பெஞ்சமின், வேலுமணி மீது வழக்கு பதிவு

சென்னை: வாக்குச்சாவடியில் புகுந்து ஜாதி பெயரை சொல்லி அவதூறாக பேசிய விவகாரத்தில் அமைச்சர் பெஞ்சமின் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக உள்ளாட்சி துறை அமைச்சர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முகப்பேர் கிழக்கு 92வது வட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையமான எம்.ஜிஆர் அரசு பள்ளியில், பூத் எண் 408, 409, 410 மற்றும் 411 ஆகிய பூத்களில் வாக்குப்பதிவு நடந்தது. அப்போது, மதுரவாயல் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் பெஞ்சமின் உட்பட அதிமுக பிரமுகர்கள் சுமார் 25க்கும் மேற்பட்டோர் திடீரென்று வாக்குச்சாவடியில் புகுந்து தகராறு செய்தனர்.இதனை, வாக்காளர்கள் மற்றும் திமுகவினர் தட்டிக்கேட்டனர். இதனால், அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அமைச்சர் பெஞ்சமின் திமுகவினர் மற்றும் வாக்காளர்களை ஜாதியை சொல்லி, ஆபாச வார்த்தைகளால் திட்டினார்.இதுகுறித்து, திமுகவினர் ஜெ.ஜெ.நகர் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில், தேர்தல் நடத்தை விதிமுறைக்கு மாறாக செயல்பட்ட அமைச்சர் பெஞ்சமின் மீது, 143வது பிரிவின் கீழ் சட்ட விரோதமாக கூட்டம் சேர்ப்பது, 294 பிரிவின் கீழ் ஆபாசமாக பேசுவது என இரண்டு வழக்குகளை போலீசார் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் வேலுமணி: தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 6ம் தேதி நடந்தது. அன்று காலை 10.15 மணிக்கு கோவை குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த ஓட்டுச்சாவடிக்கு தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளரும், உள்ளாட்சித்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி காரில் சென்றார்.ஓட்டுச்சாவடியில் பணி எப்படி நடக்கிறது? ஓட்டுச்சாவடிக்கு வாக்காளர்கள் அதிகளவு வந்திருக்கிறார்களா? என பார்ப்பதற்காக அவர் சென்றார். அப்போது அவர் ஓட்டுச்சாவடிக்கு 100 மீட்டர் எல்லைக்குள் அதிமுக கட்சி கொடியுடன் காரில் சென்றதாக தெரிகிறது. மேலும் அவர் கட்சியின் நிறத்தில் துண்டு அணிந்திருந்தார்.

இதுதொடர்பாக தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் மண்டல அலுவலர் ராஜா முகமது புகார் அளித்திருந்தார். அதன்பேரில், தேர்தல் நடத்தை விதிகள் மீறியதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories:

More
>