விஸ்வரூபம் எடுக்கும் வாக்குப்பதிவு இயந்திர விவகாரம்: ஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க கோரி தேர்தல் ஆணையத்தில் புகார்

l 3 ஊழியர்களிடம் 1.12 லட்சம் வந்தது எப்படி : சூடுபிடிக்கும் விசாரணை : மறு விசாரணை கோரும் காங்கிரஸ்

சென்னை: வேளச்சேரி தொகுதியில் 3 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஊழியர்கள் பைக்கில் கொண்டு ெசன்ற விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது. பெட்டியை எடுத்துச் சென்றவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 1.12 லட்சம் பணம் யாருடையது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு மறு வாக்கு பதிவு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் மாலை 7 மணியுடன் முடிவடைந்தது. பல இடங்களில் வாக்குப்பதிவு மையத்திற்குள் அதிமுகவினர் அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதேபோல், வேளச்சேரி தொகுதியில் பல வாக்குசாவடிகளில் அதிமுகவினர் கடைசி நேரத்தில் கள்ள ஓட்டுகள் போட முயன்றனர்.

அதை காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சியினர் முறியடித்தனர். ஆனாலும் பல இடங்களில் முறைகேடுகள் நடந்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் தரமணி 100 அடி சாலையில் 3 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அடையாளம் தெரியாத 3 நபர்கள் மோட்டார் பைக்கில் கொண்டு சென்றனர். அப்போது அவ்வழியாக தனியார் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர், வாக்குப்பதிவு இயந்திரங்களை 2 பைக்கில் எடுத்து செல்வதை பார்த்து அவர்களை வழிமறித்துள்ளார். ஆனால், வாக்குப்பதிவு இயந்திரத்தை கொண்டு சென்ற 3 பேரும் அந்த ஊழியருக்கு எந்தவித பதிலும் சொல்லாமல் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் தங்களது வாகனத்தை விரைவாக ஓட்டிச்சென்றனர்.

இதனால், உணவு டெலிவிரி ஊழியர் வாக்குப்பதிவு இயந்திரத்தை கடத்துகிறார்கள் என சத்தமாக கூச்சலிட்டார். அப்போது சாலையில் இருந்த பொதுமக்கள் பைக்கில் வாக்குபதிவு இயந்திரத்தை எடுத்து சென்ற 3 பேரையும் பொதுமக்கள் வழிமறித்து பிடித்து சரமாரியாக உதைத்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் மற்றும் திமுகவினர் நிகழ்விடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்குள் அவரச அவசரமாக போலீசார் பொதுமக்களிடம் இருந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை கடத்தி வந்த 3 நபர்கள் மற்றும் 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள், அவர்கள் வந்த  பைக்கையும் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதைபார்த்த காங்கிரசார் வாக்குப்பதிவு இயந்திரம் கடத்தி வந்த நபர்களை காப்பாற்றும் நோக்கில் போலீசார் ஈடுபடுவதாக கூறி வேளச்சேரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்களிடம் சிக்கிய 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் 2 பேர் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் என்றும் ஒருவர் சென்னை மெட்ரோ வாட்டர் ஊழியர் என தெரியவந்தது. அவர்களிடம் இருந்து கட்டுக்கட்டாக 1.12 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பைக்கில் கொண்டு வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தரமணி 100 அடி சாலையில் உள்ள இந்திரா பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிகளில் இருந்து எடுத்து வந்ததும் தெரியவந்தது.  பிடிபட்ட வாக்குப்பகுதி இயந்திரங்கள் குறித்து தேர்தல் அதிகாரிகள் கொடுத்த விளக்கத்தை வேளச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு அவர் தேர்தல் அதிகாரிகளிடம் எந்த வித பாதுகாப்பு இன்றி 3 வாக்கு பதிவு இயந்திரங்கள் பைக்கில் கொண்டு செல்ல காரணம் என்ன?.

திட்டமிட்டு வாக்கு பதிவு இயந்திரத்தை மாற்றும் நோக்கில் இந்த சதி திட்டம் நடந்துள்ளதா? ஊழியர்களிம் கட்டுக்கட்டாக 1.12 லட்சம் பணம் யார் கொடுத்தது. இது திட்டமிட்டு வாக்கு பதிவு இயந்திரங்களை மாற்றும் நோக்கத்தில் தான் இந்த சதி செயல் நடந்துள்ளது. இதில் அதிமுகவிற்கு முக்கிய பங்கு உள்ளதாக நான் சந்தேகிக்கிறேன்.

எனவே சம்பந்தப்பட்ட 3 ஊழியர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து அவர்களிடம் பேசிய நபர்கள் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி இந்த கடத்தல் சம்பவத்தில் உள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சரமாரியாக கேள்விகளை கேட்டார். அதற்கு தேர்தல் அதிகாரிகள் பதில் சொல்ல முடியாமல் திணறினர். அதை தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பைக்கில் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா, காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் சூரிய பிரகாசம், வழக்கறிஞர் எஸ்.கே.நவாஸ் ஆகியோர் தமிழக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகுவிடம் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தனர். பின்னர் வெளியில் சூரியபிரகாசம் நிருபர்களிடம் கூறியதாவது: வேளச்சேரி விவகாரம் தொடர்பாக 3 கேள்விகளை தேர்தல் ஆணையரிடம் முன் வைத்தோம். எந்தெந்த வாக்குச்சாவடிகளுக்கு எத்தனை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்தது என்பது குறித்து விளக்கம் தர வேண்டும்.

ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்ட வேளச்சேரி காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து ஐ.ஜி தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினோம். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து காட்சிகளையும் ஆய்வு செய்ய வேண்டும் எனவும், தவறு நடத்திருப்பதை சத்யபிரதா சாகு உறுதி செய்தார் எனவும், வாகனத்தில் கொண்டு சென்றது தொடர்பாக விசாரிக்கப்படும் எனவும், முதற்கட்டமாக 3 பேரை பணி இடைநீக்கம் செய்திருப்பதாக தெரிவித்தார். வேளச்சேரி தொகுதி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற தவறுகள் நடைபெற்றிருக்கலாம். எனவே, குறித்த நேரத்திற்குள் விசாரணை நடத்தப்படவில்லை எனில் நீதிமன்றத்தை நாட இருக்கிறோம்.

Related Stories:

>