கொரோனா தொற்று அதிகரிப்பு ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டிக்கெட் ரத்து

திருமலை: கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயில் மூடப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவல் காரணமாக இலவச தரிசன டிக்கெட் கடந்த ஒரு வாரமாக 23 ஆயிரம் டிக்கெட்டுகளில் இருந்து 15,000 ஆக குறைக்கப்பட்டது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆந்திராவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வருகிற 11ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை இலவச தரிசன டிக்கெட்டுகள் திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம் பக்தர்கள் ஓய்வறை மற்றும் அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸில் வழங்கப்படும். இந்த டிக்கெட்டுகள் பெற்ற பக்தர்கள் 12ம் தேதி (திங்கட்கிழமை) வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். 11ம் தேதி இரவு முதல் இந்த 2 தரிசன டிக்கெட் வழங்கும் கவுண்டர்களும் மூடப்பட உள்ளது. பிறகு ரூ.300 சிறப்பு தரிசன டிக்கட் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Related Stories:

>