×

கொரோனா பரவல் ஊரடங்கு இருந்தாலும் கடன் தவணை தள்ளுபடி சலுகை மீண்டும் வழங்க அவசியமில்லை: ரெப்போ வட்டி 4 சதவீதமாக நீடிப்பு ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை: ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டம் நடத்துகிறது. இதில், கடன் வட்டி குறைப்பு உட்பட பொருளாதாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. நடப்பு நிதியாண்டின் முதல் மறு சீராய்வு கூட்டம் இந்த மாதம் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையில் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் மற்றும் அறிவிப்புகள் வருமாறு: குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி மாற்றமின்றி 4 சதவீதமாக நீடிக்கிறது. தொடர்ந்து 5வது முறையாக வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 10.5 சதவீதமாக நிர்ணயிக்கப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சி, விலைவாசியை கட்டுப்படுத்துவது ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த கொள்கை முடிவு எடுக்கப்படுகிறது. சமீபத்திய கொரோனா பரவல், பொருளாதார மீட்சியில் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தொற்று பரவலை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். பொருளாதார வளர்ச்சி ஜூன் காலாண்டில் 26.2 சதவீதம், செப்டம்பர் காலாண்டில் 8.3 சதவீதம், டிசம்பர் காலாண்டில் 5.4 சதவீதம், மார்ச் காலாண்டில் 6.2 சதவீதம் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020-21 மார்ச் காலாண்டில் பண வீக்க விகிதம் 5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

 பணப்புழக்கத்தை உறுதி செய்யும் வகையில், உற்பத்தி சார்ந்த துறைகளுக்கு நிதியுதவி வழங்கப்பட வேண்டும். கடன் வழங்குவதற்காக நபார்டு, என்எச்பி, சிட்பி ஆகியவற்றுக்கு கூடுதலாக ரூ.50,000 கோடி வழங்கப்பட வேண்டும். பேமண்ட் வங்கிகளில் அதிகபட்ச இருப்பு ஒரு லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சம் வரை உயர்த்தப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், கடன் தவணை தள்ளுபடி சலுகையை மீண்டும் வழங்குவதற்கு அவசியம் இல்லை என சக்தி காந்ததாஸ் தெரிவித்தார்.

Tags : Reserve Bank , No need to repay loan installment waiver despite corona spread curfew: RBI announces repo rate hike of 4%
× RELATED ரயில் இருப்பு பாதை வழித்தடம்...