×

சட்டீஸ்கரில் நக்சல்களால் கடத்தப்பட்ட வீரரின் புகைப்படம் வெளியீடு: ஜம்முவில் குடும்பத்தினர் சாலை மறியல்

புதுடெல்லி: சட்டீஸ்கரில் கடத்தப்பட்ட அதிரடிப்படைவீரரின் புகைப்படத்தை நக்சல்கள் வெளியிட்டுள்ளனர். சட்டீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் கடந்த 3ம் தேதி 1,500 பாதுகாப்பு படை வீரர்கள், பல குழுக்களாக பிரிந்து நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்களின் மீது நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 22 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சண்டையின் போது, நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கை எடுத்து வரும் ‘கோப்ரா’ சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்த கமாண்டோ வீரர் ராகேஷ்வர் சிங் மன்ஹாஸ் காணாமல் போனார். அவரை பாதுகாப்பு படைகள் தீவிரமாக தேடி வரும் நிலையில், அவர் தங்களின் பிடியில் இருப்பதாக நேற்று முன்தினம் இரவு நக்சல்கள் அறிவித்தனர். இது தொடர்பாக, சமூக வலைதளங்களில் அறிக்கை வெளியிட்ட அவர்கள், அவரை விடுப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நடுவர் குழுவை ஏற்படுத்தும்படி சட்டீஸ்கர் அரசுக்கு நிபந்தனை விதித்துள்ளனர்.

இந்நிலையில், ராகேஷ்வர் தங்களின் பிடியில் இருக்கும் புகைப்படத்தை நக்சல்கள் நேற்று வெளியிட்டனர். அதில் அவர், அடையாளம் தெரியாத இடத்தில் பனை ஓலையால் கட்டப்பட்ட குடிசையில்  அமர்ந்து ள்ளார்.இந்த புகைப்படம் மற்றும்  நக்சல்கள் வெளியிட்ட அறிக்கையின் நம்பகத்தன்மை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கமாண்டோ வீரர் ராகேஷ்வர், ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர். அவரை நக்சல்களின் பிடியில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, அவருடைய குடும்பத்தினர் ஜம்மு - பூஞ்ச் நெடுஞ்சாலையில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். ராகேஷ்வரின் மனைவி மீனு கூறுகையில், ‘‘எனது கணவர் அரசின் பொறுப்பில் இருக்கிறார். எனவே, அவர் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை,’’ என்றார்.


Tags : Naxals ,Chhattisgarh ,Jammu , Photo of soldier abducted by Naxals in Chhattisgarh released: Family roadblock in Jammu
× RELATED சட்டீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 29...