×

சீனாவை பின்னுக்கு தள்ளும் இந்திய பொருளாதாரம் 12.5% வளர்ச்சியை எட்டும்: சர்வதேச நிதியம் கணிப்பு

வாஷிங்டன்: நடப்பாண்டில் இந்திய பொருளாதாரம் சீனாவை காட்டிலும் அதிகமாக 12.5 சதவீத வளர்ச்சியை எட்டும் என சர்வதேச நிதியம் கூறியுள்ளது. சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர மாநாடு விரைவில் நடக்க உள்ளது. இதையொட்டி, சர்வதேச நிதியம் தனது உலக பொருளாதார ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், கொரோனா பாதிப்பு காரணமாக உலக பொருளாதாரம் கடந்த ஆண்டு 4.3 சதவீதமாக சுருங்கியதாக கூறப்பட்டுள்ளது. ஆனாலும், 2009ம் ஆண்டு ஏற்பட்ட நிதி நெருக்கடி காலகட்டத்தை காட்டிலும் இது இரண்டரை மடங்கு அதிகம் என கூறப்பட்டுள்ளது.

கடந்த 2020ல் கொரோனா பாதிப்பிலும் நேர்மறையான பொருளாதார வளர்ச்சி கண்ட ஒரே நாடு சீனா. அதன் பொருளாதார வளர்ச்சி 8.6 சதவீதமாக இருந்தது. ஆனால், நடப்பாண்டில் சீனாவை இந்தியா முந்தும் என சர்வதேச நிதியம் கூறி உள்ளது. இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி 12.5 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளது. 2022ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும் என்றும் கூறி உள்ளது. இது குறித்து சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் கூறுகையில், ‘‘ஏற்கனவே கூறியதை விட 1 சதவீதம் அதிகமாக இந்திய பொருளாதாரம் நடப்பாண்டில் 12.5 சதவீதமாக வளர்ச்சி அடையும். ஏற்கனவே இந்திய பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி பயணிக்கத் தொடங்கி விட்டது. அதன் பொருளாதார நடவடிக்கைகள் வழக்கத்திற்கு வந்து விட்டதற்கான சான்றுகளை காண முடிகிறது’’ என்றார்.

Tags : China ,IMF , Indian economy to overtake China to reach 12.5% growth: IMF forecast
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...