×

இரவு நேர ஊரடங்கு அமல் இ பாஸ் கேட்டு 73 ஆயிரம் பேர் விண்ணப்பம்

புதுடெல்லி: டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இ பாஸ் கேட்டு 73 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நேற்றுமுன்தினம் முதல் அமலுக்கு வந்துள்ளது. அவசர சேவை, அத்தியாவசிய சேவைக்கு செல்லும் அனைவரும் இபாஸ் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்டெல்லியில் ஒரே நாளில் 73 ஆயிரம் பேர் இ பாஸ் கேட்டு விண்ணப்பித்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இ பாஸ் பொதுமக்கள் எளிதாக பெற www.delhi.gov.in என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த இணையதளத்தில் நேற்று 73,154 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 34,759 மனுக்களை அதிகாரிகள் நிராகரித்து விட்டனர். 30,940 விண்ணப்பங்களை காத்திருப்பில் வைத்துள்ளனர். 11 மாவட்டங்களிலும் 1271 விண்ணப்பங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கியிருந்தனர். ஊரடங்கு தளர்வில் இல்லாதவர்கள் இ பாஸ் கேட்டு விண்ணப்பித்ததால் தான் பெரும்பாலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி மாவட்டத்தில் இருந்து மட்டும் 13,139 மனுக்கள் அதிகபட்சமாக வந்தன. அதற்கு அடுத்தபடியாக தென்மேற்கு டெல்லி மாவட்டத்தில் 11,661, தெற்கு டெல்லியில் 9,947, மேற்கு டெல்லியில் 7673 , வடமேற்கு டெல்லியில் 6,560, கிழக்கு டெல்லியில் 6065 மனுக்கள் இ பாஸ் கேட்டு விண்ணப்பம் வந்துள்ளன. இதில் புதுடெல்லி மாவட்டத்தில்தான் அதிக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அங்கு 6,074 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதே போல் 6,525 மனுக்கள் காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளன. கிழக்கு டெல்லியில் 5603 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அங்கு 42 மனுக்கள் மட்டுமே காத்திருப்பில் வைக்கப்பட்டன. மேற்கு டெல்லியில் 5580 மனுக்களும், தெற்கு டெல்லியில் 4637 மனுக்களும், மேற்கு டெல்லியில் 3431 மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. தெற்கு டெல்லியில் 5093 மனுக்களும், வடமேற்கு, தென்மேற்கு டெல்லியில் தலா 4102 மனுக்களும் காத்திருப்பில் வைக்கப்பட்டன. ஷாதரா மாவட்டத்தில் 1110 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 1105 மனுக்கள் காத்திருப்பில் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



Tags : Amal , Night, time curfew, amal, e pass
× RELATED பொய்யானது பாஜகவின் வாரிசு அரசியல்...