மாவோயிஸ்ட் தொடர்பால் கைது சாய்பாபா பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்: டெல்லி பல்கலை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

புதுடெல்லி: மாவோயிஸ்ட் தொடர்பால் கைது செய்யப்பட்ட பேராசிரியர் சாய்பாபா பணிநீக்கத்தை டெல்லி பல்கலை துணை வேந்தர் ரத்து செய்ய வேண்டும் என்று ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. டெல்லி பல்கலைக்கு உட்பட்ட ராம்லால் ஆனந்த் கல்லூரி பேராசிரியராக இருந்தவர் சாய்பாபா. கடந்த 2014ம் ஆண்டு மாவோயிஸ்ட் தொடர்பு காரணமாக மகாராஷ்டிர மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கல்லூரி நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்தது. இந்த வழக்கில் 2017ம் ஆண்டு அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார். தற்போது அவர் நாக்பூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நிலுகையில் உள்ள நிலையில் திடீரென கல்லூரி நிர்வாகம் மார்ச் 31ம் தேதியுடன் பணி நீக்கம் செய்தது. மேலும் இதுவரை அவரது வங்கி கணக்கில் பாதி சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த சம்பளம் நிறுத்தப்பட்டு மொத்தமாக 3 மாத சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டது.

இதுதொடர்பான உத்தரவு சாய்பாபா மனைவி வசந்தாவுக்கு ஏப்ரல் 1ம் தேதி கிடைத்தது. இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக சாய்பாபா மனைவி அறிவித்து இருந்தார். தற்போது சாய்பாபா பணி நீக்கத்திற்கு டெல்லி பல்கலை ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக பல்கலை துணை வேந்தர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவித்துள்ளனர். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: பேராசிரியர் சாய்பாபாவுக்கு தண்டனை வழக்கப்பட்ட வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் இன்னும் இறுதி தீர்ப்பு வழங்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் பேராசிரியர் சாய்பாபா மீது பணிநீக்க நடவடிக்கை எடுத்து இருப்பதை பல்கலை துணை வேந்தர் மறுஆய்வு செய்து, அவர் மீதான நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும். மேலும் அவரது அப்பீல் வழக்கில் இறுதி உத்தரவு வரும் வரை எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளக்கூடாது.

இந்த விவகாரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி சாய்பாபா மனைவி வசந்தாவுக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும், அவர் உரிய பதில் அளிக்காததால் தான் இந்த நடவடிக்கை எடுத்ததாகவும் ராம்லால் ஆனந்த் கல்லூரி தெரிவித்து உள்ளது. ஆனால் இதற்கு வசந்தா பதில் அனுப்பி

உள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக சிறையில் சென்று சாய்பாபாவை சந்திக்க முடியவில்லை என்று அவர் நவம்பர் 11ம் தேதி பதில் அனுப்பி இருக்கிறார். அதனால் தான் அவரது பதிலை பெறமுடியவில்லை என்றும் அந்த கடிதத்தில் கூறியிருக்கிறார். ஆனால் வசந்தாவின் இந்த கடிதத்திற்கு கல்லூரி நிர்வாகம் எந்தவித பதிலையும் அனுப்பவில்லை. ஆனால் பழிவாங்கும் நோக்குடன் எந்தவித விளக்கமும் அளிக்காமல் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>