மீண்டும் கொடூர முகம் காட்டும் கொரோனா ஒரேநாளில் 1.15 லட்சம் பேர் பாதிப்பு: அனைத்து முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

புதுடெல்லி: கொரோனா வைரஸ் 2வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.  இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 1.15 லட்சம் பேர் வைரஸ்  தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. மீண்டும்  கொரோனா வைரஸ் தனது கொடூர முகத்தை காட்டத் தொடங்கியிருக்கும் நிலையில்,  அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி  இன்று ஆலோசிக்க உள்ளார். உலகையே புரட்டிப் போட்ட கொரோனா வைரஸின்  பேயாட்டத்தில் இருந்து 2021ம் ஆண்டில் விடிவு பிறந்து விட்டது என்ற  மக்களின் நம்பிக்கையில் இடி விழுந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம்  இந்தியாவில் நுழைந்த கொரோனா வைரஸ் படிப்படியாக தனது அசுர கரங்களை  விரித்தது. ஏப்ரல் மாதத்தில் தினசரி பாதிப்பு ஆயிரமாக அதிகரித்த நிலையில்,  ஜூலையில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேரை வைரஸ் தொற்றியது. இதனால், மார்ச்  மாதத்தில் இருந்தே நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டு, அனைத்து  தொழில்களும் முடக்கப்பட்டன. வேலையிழந்த வெளிமாநில தொழிலாளர்கள் நடைபயணமாக  சொந்த கிராமத்தை நோக்கி படையெடித்தனர். வேலைவாய்ப்பின்மை, முடங்கிய தொழில்  துறை என மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகினர். ஒருவாய் சோறுக்காக கையேந்தும்  நிலைக்கு பலர் தள்ளப்பட்டனர்.

ஜூன், ஜூலையில் தனது கோர முகத்தை காட்டத்  தொடங்கிய கொரோனா வைரஸ் ஆகஸ்ட், செப்டம்பரில் உச்சம் அடைந்தது. அதிகபட்சமாக  கடந்த ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி கொரோனா ஒரு நாள் பாதிப்பு 97,859ஆக  பதிவாகி இருந்தது. முககவசம் அணிவது, சானிடைசர் பயன்பாடு, பொதுமக்கள்  கூடுவதற்கு தடை, சமூக இடைவெளி என கடுமையான கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள்  பின்பற்றப்பட்டதால் படிப்படியாக சரியத் தொடங்கிய பாதிப்பு, 2021ம் ஆண்டு  புத்தாண்டு பிறந்த போது தினசரி பாதிப்பு 20 ஆயிரமாக சரிந்தது. இதனால்,  2020ம் ஆண்டோடு கொரோனா ஒழிந்ததாக மக்கள் நம்பினர். கடந்த பிப்ரவரியில்  புதிதாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டியதால்  மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இதற்கிடையே,  இங்கிலாந்து வைரஸ், பிரேசில் வைரஸ் என பல மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ்,  இந்தியாவில் பிப்ரவரி நடுவில் தனது 2வது அலையை வீசத் தொடங்கியது. முதல்  அலையைப் போல் 2வது அலை இருக்காது, அது படுதீவிரமானது என மத்திய அரசு  எச்சரித்த நிலையில், கொரோனா 2வது அலை தற்போது தனது கொடூர முகத்தை காட்டத்  தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாக கொரோனா புதிய பாதிப்பு நாள்தோறும்  அதிகரித்து அச்சத்தை உருவாக்கி வருகின்றது.

கொரோனா பரிசோதனை, கொரோனா  தடுப்பூசிகள் போடப்பட்டாலும் கூட கொரோனா பரவல் உச்சத்தை அடைந்துள்ளது.  மீண்டும் தினசரி பாதிப்பு 40 ஆயிரம், 50 ஆயிரம் என அதிகரித்த நிலையில்  ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.  இந்தியாவில் முதல் முறையாக கடந்த 4ம் தேதி தினசரி பாதிப்பு 1 லட்சத்தை தாண்டிய நிலையில், நேற்று 1.15 லட்சமாக உயர்ந்துள்ளது பெரும் பீதியை  ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி ஒரே நாளில் 630 பேர் பலியாகி இருப்பது  மீண்டும் அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. மொத்த உயிரிழப்பு  எண்ணிக்கையானது 1 லட்சத்து 66,177 ஆக உயர்ந்துள்ளது. 8 லட்சத்து 43,473  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைவோர் சதவீதம் 92.11 ஆக  குறைந்துள்ளது. இதுவரை 1 கோடியே 17 லட்சத்து 92,135 பேர் குணமடைந்துள்ளனர்.  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1.28 கோடியாக அதிகரித்துள்ளது. பாதிப்பு  தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல மாநிலங்களில் மீண்டும் ஊரடங்குகள்  விதிக்கப்பட்டு வருகின்றன. டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் அடுத்த 4 வாரங்கள் மிகவும்  அபாயகரமானது என மத்திய அரசு எச்சரித்துள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை  எடுப்பது தொடர்பாக இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை  நடத்த இருக்கிறார். இந்த கூட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான  நடவடிக்கைகள், தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்துவது உள்ளிட்டவை குறித்து  ஆலோசிக்கப்பட இருக்கிறது. மேலும் அதிக பாதிப்பு உள்ள மாநிலங்களில்  விதிக்கப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை குறித்தும் முதல்வர்களுடன்  பிரதமர் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டெல்லியில் 5,506 பேருக்கு கொரோனா

டெல்லியில் நேற்று ஒரே நாளில் 5,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 20 பேர் ஒரேநாளில் பலியானார்கள்.

டெல்லியில் நேற்று முன்தினம் 90,202 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 52,477 ஆர்டி பிசிஆர் சோதனைகள், 37,724 ரேபிட் ஆன்டிஜென் சோதனைகள் ஆகும். இந்த சோதனைகள் முடிவில் 5,506 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து இரண்டாம் நாளாக டெல்லியில் 5 ஆயிரத்திற்கும் மேல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 5100 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 5,506 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதுதான் இந்த ஆண்டின் அதிகபட்சமாகும்.

இந்த பதிப்பால் டெல்லியில் ஒட்டுமொத்தமாக 6,90,568 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 20 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். இதனால் ஒட்டுமொத்த கொரோனா பலி எண்ணிக்கை 11,133 ஆனது. அதே போல் கொரோனா தொற்று பாதிப்பு சதவீதம் 4.93ல் இருந்து 6.1 சதவீதமாக உயர்ந்தது. ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை 19,455 ஆனது. வீட்டு தனிமையில் இருக்கும் நோயாளிகள் எண்ணிக்கை 8,871ல் இருந்து 10,048 ஆனது. கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 3291ல் இருந்து 3708 ஆனது.

Related Stories:

>