×

கொரோனா தடுப்பூசி போடுவதில் கர்நாடகாவுக்கு 6வது இடம்?: அமைச்சர் சுதாகர் தகவல்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் இதுவரை 48.10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டுள்ளதின் மூலம் நாட்டில் 6வது இடத்தில் உள்ளதாக சுகாதார துறை அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் தெரிவித்தார்.  இது குறித்து செய்தியாளர்களிடம் கூறும்போது, ``நாட்டில் கடந்தாண்டு இறுதியில் குறைவாக இருந்த கொரோனா தொற்று பாதிப்பு, கடந்த பிப்ரவரி மாதம் முதல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாள் தோறும் தொற்று பாதிப்பு 20 ஆயிரத்திற்கும் குறைவாக இருந்த நிலையில் தற்போது ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. அதேபோல் சிகிச்சை பலனின்றி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கர்நாடக மாநிலத்திலும் தொற்று பாதிப்பு  6 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

 மாநிலத்தில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் 33 ஆயிரத்து 697 படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தயார் செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் 20 சதவீதம் படுக்கைகள் ஒதுக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் 15 ஆயிரத்து 733 படுக்கைகள் உள்ளது. இதில் 10 ஆயிரத்து 083 படுக்கைகள் கோவிட்-19 நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடுவதில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்குவங்க மாநிலங்கள் உள்ளது. அந்த வரிசையில் தடுப்பூசி போடுவதில் கர்நாடகம் 6வது இடத்தில் உள்ளது. இதுவரை 48.10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாநில அரசின் கோரிக்கையை ஏற்று 15 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்துகளை மத்திய அரசு வழங்கியுள்ளது’’ என்றார்.

Tags : Karnataka ,Minister ,Sudhakar , Corona Vaccine, Karnataka, 6th place
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!